”ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் எங்கே?” – கபில் சிபல் கேள்விக்கு பெருகும் ஆதரவு!

Published On:

| By christopher

Kapil Sibal questioned Where is Jagdeep Dhankhar?

தனது பதவியை திடீரென ராஜினாமா செய்த முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜெகதீப் தன்கர் துணை குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை இருந்தது.

ADVERTISEMENT

ஆனால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த ஜூலை 21 அன்று, உடல்நலக் காரணங்களைக் காரணம் காட்டி தனது பதவியை ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தது தேசிய அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது அடுத்த மாநிலங்களவை தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு, வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என மாநிலங்களவை எம்.பியும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய வரலாற்றில் ஒருபோதும் நடந்ததில்லை!

அவர் தனது யூடியூப் பக்கத்தில் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், ”ஜூலை 22 அன்று, நமது ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இல்லை. முதல் நாளில், நான் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன், அவரது தனிப்பட்ட செயலாளர் தொலைபேசியை எடுத்து அவர் ஓய்வெடுப்பதாகக் கூறினார்.

ADVERTISEMENT

எனது அரசியல் சகாக்கள் பலராலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் ‘லாபடா (காணாமல் போன) லேடீஸ்’ படம் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் ‘காணாமல் போன துணை குடியரசுத் தலைவர்’ பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இதுபோன்ற ஒரு சம்பவம் இந்திய வரலாற்றில் ஒருபோதும் நடந்ததில்லை.

தங்கர் துணை குடியரசுத் தலைவராக இருந்த தனது பதவிக்காலம் முழுவதும் பாஜக அரசாங்கத்தை ஆதரித்து பாதுகாப்பு அளித்து வந்தார். ஆனால் இப்போது எதிர்க்கட்சி அவரைப் பாதுகாக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும்!

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமா? தன்கர் எங்கிருக்கிறார் என்பதை உள்துறை அமைச்சகம் தெரிந்து கொள்ள வேண்டும். அவரது உடல்நிலை குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும்.

அவருக்கு எங்காவது சிகிச்சை அளிக்கப்படுகிறதா? அவரது குடும்பத்தினரும் எதுவும் சொல்லவில்லை. என்ன பிரச்சினை? இதுபோன்ற விஷயங்களை மற்ற நாடுகளில் மட்டுமே நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இந்தியா ஜனநாயக நாடு, எனவே இதுபோன்ற விஷயங்கள் பொதுவில் தெரிவிக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும், “தன்கருடன் எனக்கு நல்ல தனிப்பட்ட உறவுகள் இருந்தன. அவர் என்னுடன் ஒரு வழக்கறிஞராக பணிபுரிந்தவர். அவர் பல வழக்குகளில் என்னுடன் வாதிட்டுள்ளார். நான் சென்று FIR பதிவு செய்வது நன்றாக இருக்காது. அவரிடமிருந்தும், அவரது நண்பர்கள், குடும்பத்தினரிடமிருந்தும் எந்த செய்தியும் இல்லாதது எனக்கு கவலையாக இருக்கிறது.

எனவே உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நான் வலியுறுத்த விரும்புகிறேன். தன்கர் எங்கள் துணை ஜனாதிபதி, எனவே தயவுசெய்து அவர் இருக்கும் இடம் குறித்து ஒரு அறிக்கையை கொடுங்கள்” என்று கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு தற்போது வரை மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படாத நிலையில், கபில் சிபல் எழுப்பிய கேள்விக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நிறைய ஊகங்கள் உள்ளன!

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உலக ஜாட் மக்களே, ஒன்றுபடுங்கள். இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ஜாட் இனத்தைச் சேர்ந்தவர், 21.7.2025 அன்று ராஜினாமா செய்த பிறகு காணாமல் போய்விட்டார், அதன் பிறகு அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. பாஜக தலைவர்கள் அவரை அமைதியாகவும், தொடர்பில்லாதவராகவும் இருக்கச் சொன்னார்களா? அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாரா? அவர் கடத்தப்பட்டாரா என இது குறித்து நிறைய ஊகங்கள் உள்ளன. ஜாட் இனத் தலைவர் ராகேஷ் டிகாயிட் கூட அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

அமித் ஷா பதிலளிக்க வேண்டும்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ குல்தீப் வாட்ஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிபலின் கோரிக்கை முற்றிலும் சரியானது. ஜக்தீப் தன்கர் எங்கே? எந்த நிலையில் இருக்கிறார் என்பதை முழு நாடும் அறிய விரும்புகிறது. இதற்கு நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பதிலளிக்க வேண்டும். இது மத்திய அரசின் பொறுப்பாகும்” எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share