ஒரு மொழியில் பிரபலமாகத் திகழும் நடிகரை, நடிகையை இன்னொரு மொழிக்கு இழுத்துவரும் வழக்கம் தியாகராஜ பாகவதர் காலம் முதல் தொடர்ந்து வருகிறது. அந்த பிரபலங்களின் படங்கள் ‘டப்’ செய்யப்பட்டு பல மொழிகளில் வெற்றி பெற்றால், அப்படிப்பட்ட வாய்ப்புகள் அவர்களைத் தேடி வராமல் இருந்தால் தான் ஆச்சர்யம். அந்த வரிசையில், ‘காந்தாரா’ தந்து பல மொழி ரசிகர்களை ஈர்த்த ரிஷப் ஷெட்டி தற்போது அதன் ‘ப்ரிக்யூல்’ ஆக ‘காந்தாரா: பர்ஸ்ட் சேஃப்டர்’ வெளியீட்டுக்கான பணிகளில் மும்முரமாக இருக்கிறார்.
இந்த நிலையில், மீண்டுமொரு ‘பீரியட் பிலிம்’மில் அவர் நடிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் உருவாக்குகிற இப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 36’ எனத் தற்காலிகப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

அஸ்வின் கங்கராஜு இயக்குகிற இப்படத்தின் மோஷன் போஸ்டரில் ‘இது ஒரு போராளியின் கதை’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் வங்காளத்தில் நிகழ்ந்த கதையாக இப்படம் உருவாக்கப்பட இருக்கிறதாம்.
’பாகுபலி’ எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் இந்தப் படத்தின் இயக்குனர் உதவியாளராகப் பணியாற்றியவராம். அதனால், இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.
ஒரேநேரத்தில் தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் இந்தப் படம் பின்னர் தமிழ், இந்தி, மலையாளத்தில் ‘டப்’ செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தப் படம் மட்டுமல்லாமல் ‘சத்ரபதி சிவாஜி மஹராஜ்’ எனும் வரலாற்றுப் படம், பிரசாந்த் வர்மாவின் ‘ஜெய் ஹனுமான்’ எனும் புராண – சாகச – ஆக்ஷன் படமொன்றிலும் நடிக்கவிருக்கிறாராம் ரிஷப் ஷெட்டி.
மேற்சொன்ன படங்களின் வரிசையே, அவையனைத்தும் ‘பான் இந்தியா’ அந்தஸ்தை குறிவைத்து உருவாக்கப்படுவதைக் காட்டும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? ‘இனி நடிச்சா, ஒன்லி ‘பான் இந்தியா’ படம் மட்டும்தான்’ என்று யஷ், பிரபாஸ் பாணியில் ரிஷப் ஷெட்டியும் இறங்கிவிட்டார் என்பது தெளிவாகப் பிடிபடுகிறது.