விஜய் எது செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும் என கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இன்று (அக்டோபர் 8) சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் பிறந்து வளர்ந்தது சென்னை என்றாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தற்போது தான் முதல்முறையாக் நண்பர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்துள்ளேன்.
கன்னடத்தில் நான் நடித்த ’45’ என்ற படம் அனைத்து மொழிகளிலும் டிசம்பரில் வெளியாக உள்ளது. மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். மேலும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது” என்றார்.
ரஜினி குறித்து பேசுகையில், ”எங்கே சாந்தி, எங்கே நிம்மதி கிடைக்குமோ அங்கு ரஜினி செல்வார். அவர் ஒரு வித்தியாசமான மனிதர்” என்றார்.
நடிகர் விஜய் குறித்து பேசுகையில், “விஜய் அரசியலுக்கு வந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அவருக்கு வாழ்த்து சொல்கிறேன். கரூர் சம்பவம் ஒரு மனிதனாக வருத்தப்படக் கூடியது அது ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்பது குறித்து எனக்கு தெரியாது. தமிழக அரசியல் பத்தி எனக்குப் போதிய அளவு தெரியாது. நடிகரும், சகோதரருமான விஜய்க்கு நான் சொல்வது எது செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும்” என்றார்.