பிரபல கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12ஆவது சீசன் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. இதை கன்னட நடிகர் சுதீப் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதி தொழிற்பேட்டையில் சுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பில் பிக் பாஸ் என்ற தனியார் நிகழ்ச்சிக்கான ஸ்டுடியோ உள்ளது. அங்கு பிரம்மாண்டமான வீடுகள் மாளிகைகள் சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டு அங்கு இந்த பிக் பாஸ் என்ற தனியார் நிகழ்ச்சி சூட்டிங் நடைபெற்று வந்தது.
12 ஆவது சீசனில் 11 பெண்கள் உள்ளிட்ட 19 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் அங்கு கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அவர்களுக்கு முறையாக அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று நோட்டீஸ் வழங்கியது.
அதில் நாள் ஒன்றுக்கு 2.50 லட்சம் லிட்டர் தண்ணீர் உபயோகிக்கப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட நீர் எந்த சுத்திகரிப்பும் இல்லாமல் திறந்த வெளியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும் அப்பகுதியில் குப்பையும் தரம் பிரிக்காமல் கொட்டப்படுகிறது. குப்பையை தரம் பிரிக்கவும், கழிவுநீரை சுத்திகரிக்கவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிக்பாஸ் வீட்டை உடனடியாக மூட வேண்டும் என நேற்று முன்தினம் ‘நோட்டீஸ்’ அளித்தது.
அந்த நோட்டீசை வாங்க தயங்கிய நிலையில் ராம்நகர் தாசில்தார் தேஜஸ்வினி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரி குழு போலீசாரருடன் சென்று அங்குள்ள அந்த ஸ்டுடியோவுக்கு பூட்டி சீல் வைத்தனர்.
தொடர்ந்து கன்னட அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அங்கிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் அங்குள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.