தி.மு.க மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று (டிசம்பர் 29) மாலை திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டப்புத்தகத்தை திமுக மகளிர் அணியினர் பரிசாக வழங்கினர்.
தொடர்ந்து இந்த மாநாட்டில் தலைமை உரையாற்றிய கனிமொழி, “இந்த மாநாட்டில் அரசியலமைப்பு புத்தகத்தை முதல்வருக்கு பரிசாக வழங்கினோம்.. ஏன் தெரியுமா?
அரசியலமைப்பு புத்தகத்தில் முகவுரையில் சொல்லியிருப்பது ‘ we the people’ அந்த “People” யாரென்றால் –
இந்த மேடையில் நிற்கும் பெண்களாகிய நாங்கள்தான்.
நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் இந்த மதிப்புகளை பாதுகாக்கக் கூடிய ஒரே தலைவர் — நம்முடைய தலைவர் தான்.
இந்த நாடே அவரை நம்பி நிற்கிறது. அதனால்தான் பத்திரமாக வைத்திருங்கள் என்று அரசியலமைப்பு புத்தகத்தை அவரது கையில் கொடுத்தோம்.
தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய கடமை உங்கள் கையில் இருக்கிறது.
ஏனென்றால் உங்கள் குரல் முதலில் வந்த பிறகுதான் பாசிசத்துக்கு எதிராக இந்த நாட்டில் மற்ற குரல்கள் வருகிறது.
இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி என்று சொல்கிறோம்.
அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – இன்று ஒரு கோடி 30 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக நேரடி நிதி உதவி வழங்கும் வகையில் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்துகிறோம்.
இந்தியாவிலேயே அதிகமாக, 47% வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு.
கோவை, கரூர், நீலகிரி உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் தொடங்கிய 2,682 Start-up-களில் 56% பெண்கள் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தியாவில் உயர் கல்வி பயிலும் பெண்கள் – 28%, தமிழ்நாட்டில் – 48% ஆகும்.
ஆனால் எதிர்கட்சிகள் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக என்னென்ன கொடுமைகள் வன்முறைகள் நடந்தது என்று நாம் எல்லோருக்கும் தெரியும்.
நம்முடைய போராட்டத்திற்கு பிறகு தான் பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. நம்முடைய ஆட்சியில் தான் அந்த பெண்களுக்கு நியாயம் கிடைத்தது.
இப்படிப்பட்ட நிலையில் நம்மை பார்த்து பாஜகவினர் பேசுகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் 17 வயது சிறுமி குல்தீப் சிங் செங்கார் என்ற பாஜக முன்னாள் எம்எல்ஏவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் நாடு முழுவதும் பற்றி எரிந்த பிறகு அந்த பெண்ணுக்கு ஒரு நியாயம் கிடைத்தது .
ஆனால் சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் அந்த குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து போராடக்கூடிய அந்த பெண்ணிற்கும், பெண்ணின் குடும்பத்திற்கும் எதிராக போலீஸ் களம் இறக்கப்படுகிறது. டெல்லியின் தெருக்களில் அவர்கள் எழுத்து வரப்படுகிறார்கள்.
பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்கக்கூடிய லட்சணம் இதுதான்
.ஆனால் கோவையில் பெண்களுக்கு எதிராக ஒரு சம்பவம் நடந்தது. 30 நாட்களில் சார்ஜ் சீட் போட வேண்டும் என்று சொன்னது நம்முடைய முதல்வர். அதன்படி 30 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தகவல் செய்யப்பட்டது.
இதுதான் திமுகவுக்கும், நம்மீது குற்றம் சொன்னால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்குமான வித்தியாசம்.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்றார்கள். ஆனால் இப்போது 100 நாள் வேலைக்கு கூட வேட்டுவைத்து கொண்டிருக்கிறார்கள்.
மதக் கலவரத்தை, வெறுப்பை உருவாக்கி அரசியல் செய்யும் பாஜகவுக்கு சம்மட்டி அடி தருவது நமது முதல்வர்தான்” என்று குறிப்பிட்டார்.
