மனிதர்கள் மனிதர்களாக வாழக்கூடிய சூழ்நிலையை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாக்கித் தந்திருக்கிறது. அதை பாஜகவினர் குலைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என கனிமொழி எம்.பி குற்றம் சாட்டி உள்ளார்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். திருப்பரங்குன்றம் பிரச்சனை குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மதநல்லிணக்க சூழலை சீர் குலைக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முயற்சி செய்கிறது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார். 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால் பா.ஜ.க.வினர் திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இப்படி பேசுவது உங்களுக்கும், கட்சிக்கும் நல்லதல்ல என கிரண் ரிஜ்ஜு மிரட்டுகிறார்.
திருப்பரங்குன்றத்தில் நூறாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்ற கேட்பது சரியானது அல்ல. மணிப்பூரிலும் ஒரு தவறான தீர்ப்புக்குப் பிறகுதான் அங்கு கலவரங்கள் வெடிக்க கூடிய சூழல் உருவானது அதேபோல் நீதிமன்றத்தை பயன்படுத்தி அங்கே கலவரங்களை உருவாக்குவது என்பது மிகவும் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.
அரசியல் சாசன சட்டம் வழங்கிய வழிபாட்டு உரிமையை மீறுகிறார்கள் என்ற எல்.முருகன் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, “தமிழ்நாடு அரசு எத்தனையோ கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். எத்தனையோ கோவில்களில் விழாக்கள் நடைபெறுகிறது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில் அந்தக் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்குமிகச் சிறப்பாக எல்லா வசதிகளையும் தொடர்ந்து அறநிலையத்துறை செய்து கொண்டு தான் இருக்கிறது.
இதற்கு முன்பிருந்த ஆட்சிகளில் எல்லாம் இல்லாத அளவிற்கு குடமுழுக்கு நிகழ்ச்சிகள் நடப்பதை நம்முடைய முதல்வர் ஆட்சியில் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. மக்களின் பக்தியை நிறுத்த வேண்டும். பக்தர்களுக்கு இடையூறுகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் நாங்கள் இல்லை.
ஆனால் அந்த பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழலை உருவாக்கி அரசியல் குளிர் காய்வதற்காக இவர்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
இந்துக்களை திருப்பரங்குன்றத்தில் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்ற எல்.முருகனின் குற்றச்சாட்ட குறித்த கேள்விக்கு, “எந்தக் காலத்தில் இந்துக்கள் திருப்பரங்குன்றத்திற்கு போக முடியாத சூழல் இருந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்ற பல இந்துக்கள் எல்லா இடங்களிலும் சென்று வழிபட்டு விட்டு வரக்கூடிய ஒரு இணக்கமான சூழ்நிலையை தான் நாம் தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று யாருமே போக முடியாத சூழலை பிஜேபி தான் உருவாக்கி வைத்திருக்கிறது. அதனால் தமிழ்நாடு அரசாங்கமோ அல்லது காவல்துறையோ அங்கு கோயிலுக்கோ, மலைக்கோ செல்லக்கூடியவர்களை பாதுகாப்பாக அனுப்பி அவர்கள் வழிபட்டு விட்டு வரக்கூடிய ஒரு சூழல்தான் இருந்தது என்றார்.
தர்கா அருகில் இருக்கும் இடத்தில் தீபம் ஏற்றுவதை இஸ்லாமியர்கள் மறுக்கவில்லை. ஆனால் திமுக அரசு இதை ஈகோ பிரச்சனையாக பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, இதில் ஈகோ பிரச்சனையே இல்லை. மக்களின் வழிபாட்டு நம்பிக்கைகளை சிதைக்க கூடிய வகையில் ஒரு சர்வே கல் மீது தீபம் ஏற்ற வேண்டும் என்றால் இதுதான் இந்துக்களின் மனதை புண்படுத்தக்கூடிய ஒன்று . கோயிலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. வழிவழியாக நாம் பயன்படுத்தி வந்த தீபக்கல் அது இல்லை. அப்படி இருக்கையில் தேவையில்லாமல் எதற்காக ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலத்தை அளப்பதற்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கல் மேல் தீபத்திருநாள் முடிந்த பிறகு போய் ஏன் தீபத்தை ஏற்ற வேண்டும்.
ஆகம விதிகள்; ஆகம விதிகள் என்று பேசிக்கொண்டிருக்கக் கூடியவர்கள் அந்த ஆகம விதிகளை எல்லாம் குழிதோண்டி புதைக்க கூடிய வகையில் அதற்கு அடுத்த நாள் சென்று தீபத்தை ஏற்றுவது என்பதுதான் ஆகம விதிகளின் மீது மாறாத நம்பிக்கை வைத்திருக்கக் கூடிய பல இந்துக்களின் மனதைப் புண்படுத்தக்கூடிய ஒன்றாக மாறுகிறது.
யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசு நடந்து கொள்ளவில்லை. அப்படி எங்கள் மீது பழி சுமத்த வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் உண்மையிலேயே மக்களை புண்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டு மக்களை தன் அரசியலுக்காக ஒவ்வொரு நாளும் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது மதப் பிரச்சினைகள் இல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. அது திராவிட ஆட்சிகளின் காலகட்டத்தில் ஒரு அமைதியான இடமாக இருக்கிறது. இவர்கள் ஆட்சியில் இருக்கக்கூடிய எந்த இடத்திலாவது மத நல்லிணக்கமும், அமைதியும் இருக்கிறதா? அப்படி என்றால் யாரால் மதப் பிரச்சனைகள் உருவாகிறது. அப்படிப்பட்ட பிரச்சனைகள் இல்லாமல் மனிதர்கள் மனிதர்களாக வாழக்கூடிய சூழ்நிலையை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாக்கித் தந்திருக்கிறது அதை இவர்கள் குலைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்
