கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கிய திமுக முப்பெரும் விழா விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
நுழைவு வாயிலில் இருந்து வேனில் நின்றுகொண்டு கட்சித் தொண்டர்களை கையசைத்தபடியே பயணித்து மேடையேறினார் முதல்வர் ஸ்டாலின்.
தொடர்ந்து விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி பேசுகையில், ”ஆங்கிலத்தில் ‘All roads lead to rome’ என்று சொல்வார்கள். அதன்படி இன்று இந்தியாவின் பார்வையை கரூருக்கு திருப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு கனவு இருக்கும். எனக்கு இருக்கும் ஒரே கனவு, தலைவர் கலைஞர் பெற்ற பெரியார் விருதை இன்று பெற்றிருக்கிறேன். அதை நிறைவேற்றி தந்த முதலமைச்சர், திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொட்டும் மழையிலும் இங்கு நிற்கக் கூடிய உடன்பிறப்புகளை பார்க்கும்போது, இந்த படை போதுமா என கேட்கத் தோன்றுகிறது.
அதோடு எந்த தேர்தலையும், எந்த பகைவர்களாக இருந்தாலும், அது நம்முடைய பரம்பரை பகைவர்களாக இருக்கட்டும், பாரம்பரிய பகைவர்களாக இருக்கட்டும், புதிதாக வரக்கூடியவர்களாக இருக்கட்டும். அத்தனை பேரையும் வென்றுகாட்டுவோம் என சூளுரைக் கூடிய இந்த படை போது வெற்றி நிச்சயம்” என கனிமொழி பேசினார்.
கனிமொழிக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது போன்று பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப.சீத்தாராமனுக்கு அண்ணா விருது, முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருது, மறைந்த தலைமைச் செயற்குழு உறுப்பினரான குளித்தலை சிவராமன் குடும்பத்தாருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, முரசொலி அறக்கட்டளை சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கு முரசொலி செல்வம் விருது, சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருது, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் விருது ஆகியவற்றை வழங்கி கெளரவித்தார் முதல்வர் ஸ்டாலின்.