தமிழகத்தின் கனிம வளங்களை சுரண்டும் பட்ஜெட் – கனிமொழி காட்டம்மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், கனிமவளங்கள் நிறைந்த மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பிரத்யேகமான அரிய கனிமவள மண்டலங்கள் (Rare Earth Corridors) அமைக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், இது தமிழகத்தின் கனிமவளத்தை சுரண்டும் பட்ஜெட் என கனிமொழி எம்பி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “மத்திய பட்ஜெட்டைப் பற்றி பேச வேண்டும் என்றால் ஏமாற்றம், ஏமாற்றம், ஏமாற்றம் – அதைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாது. இந்த பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை, தமிழகத்திற்கான எந்தத் திட்டங்களும் இல்லை. யாருக்கும் எந்தச் சரியான திட்டங்களும் இல்லாத ஒரு ஏஐ பட்ஜெட் ஆக உள்ளது.
எந்த அடிப்படையும் இல்லாமல் விவசாயத்தை அதிகமாகப் பேசவே பேசாத பட்ஜெட் ஆக உள்ளது. நிதி ஆணையம் பரிந்துரைத்த அடிப்படையில் 50 சதவிகித வருவாய் பகிர்வை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல் 41% வருவாய் பகிர்வு மட்டும் தான் என்று இன்றைய பட்ஜெட்டிலும் நிதி அமைச்சர் அறிவித்திருப்பது மாநிலங்களுக்கு எதிரான மிகப்பெரிய அநீதி.
காலையில் முதல்வர் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி, கல்விக்கான நிதி போன்றவற்றில் இந்த பட்ஜெட் வழியாக நமக்கு ஏதாவது தெளிவு பிறக்குமா என்று கேட்டிருந்தார். அதற்கான ஒரு தெளிவும் இல்லாத ஒரு பட்ஜெட்டாக இது உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிறைய நிதி ஏற்கனவே வர வேண்டி உள்ளது. அதை அதிகப்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. தற்போது அதையும் குறைத்திருக்கிறார்கள். இப்படி மாநிலங்களுக்கு எதிரான பல்வேறு விஷயங்களைக் கொண்டிருக்கும் ஒரு பட்ஜெட் இது.
தமிழ்நாட்டிற்கு எந்த நிதியையும் தராமல் நம்முடைய கனிம வளத்தை சுரண்டுவதற்கான திட்டம் தீட்டக்கூடிய ஒரு பட்ஜெட்டாக உள்ளது. நம்முடைய அடிப்படை வளங்களை சுரண்டக்கூடிய பட்ஜெட் ஆக உள்ளது என்றுதான் பார்க்க முடியும்” என்றார்.
மேலும், “தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஆவது எதையாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். தமிழக மக்களை இந்த பாஜக அரசு நிச்சயமாக ஏமாற்றியிருக்கிறது. தேர்தல் என்று வரும்போது நிச்சயமாக எதிர்க்கட்சிகள் ஆகிய நாங்கள் இதை எடுத்துப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால் அதையும் தாண்டி திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் வளர்ச்சியைத் தான் எப்போதுமே பார்த்து இருக்கிறோம். அதனால் தமிழக மக்களுக்கு இது பெரிய அநீதி, மிகப் பெரிய ஏமாற்றமாக இந்த பட்ஜெட் இருக்கிறது.
பாஜகவிற்கு தமிழக மக்கள் வாக்களிப்பது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் என்றுமே நடக்காத ஒன்று.
பீகார் மாநில தேர்தலை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு, ரயில் பாதை அறிவிப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இருந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஆம், அது பீகார் பட்ஜெட் ஆகவே இருந்தது. தமிழகத்தில் அவர்களுக்கு டபுள் எஞ்சின் சர்க்காருக்கு வாய்ப்பில்லை. ஒருவேளை தமிழகத்திற்கு என்ன செய்தாலும் நாம் வெற்றி பெறப்போவதில்லை. அதனால் தமிழகத்தை கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவோடு கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு என மூன்று மாநிலங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதோபோல் மதுரை எம்பி சு. வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது தமிழ்நாட்டிற்கு மாபெரும் ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய ஒரு பட்ஜெட்; மிகப்பெரிய வஞ்சகத்தை அளிக்கும் ஒரு பட்ஜெட். சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இந்த நேரத்தில் நிறைய புதிய அறிவிப்புகள், திட்டங்கள் வரும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு பதிலாக தலைகீழாக எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக சொல்லப்படும் இரண்டு தமிழ்த் திருக்குறள்கள் அல்லது சங்க இலக்கியப் பாடல்கள் கூட இந்த முறை இல்லை. நமக்கு வஞ்சகம் இழைப்பதும், நம்முடைய வளங்களை சுரண்டுவதும்தான் இந்த பட்ஜெட்டின் அறிவிப்பு.
எல்லா வகையிலும் வஞ்சகங்கள் நிறைந்தது. குறிப்பாக ரயில்வே திட்டங்கள், புதிய தொழிற்சாலைகள், புதிய கட்டமைப்புகள் சார்ந்து ஒரு அறிவிப்பு கூட இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. மாறாக, அரிய வகை கனிமங்களை சுரண்டும் நோக்கில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகியவற்றிற்கான வழித்தடம் அமைக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
அரிய வகை கனிமங்களை ஏலம் விடுவதற்கும், உரிமம் வழங்குவதற்கும் மாநிலங்களிடமிருந்து அதைப் பறித்து ஒன்றிய அரசின் உரிமமாக மாற்றுவதற்கு சட்டம் இயற்றினார்கள். இப்போது தமிழ்நாட்டின் அரிய வகை கனிமங்களை சூறையாட தனி வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.வழங்க வேண்டிய வளங்களை வழங்கவில்லை; மாற்றாக நம்முடைய வளங்களை சுரண்டுகிற அறிவிப்புதான் வெளியிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தனது எக்ஸ் பதிவில்,” தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பிற்கான நிதியினைத் துளியும் ஒதுக்கீடு செய்யாமல் , தனது கைப்பாவைகளாக இருக்கும் சிபிஐ, ஈடி, வருமானவரித்துறை போன்ற துறைகளைக் கொண்டு அரசியல் கட்சிகளை மிரட்டி வளைத்தே தமிழ்நாட்டில் தேர்தலைச் சந்திக்கலாம் என நினைக்கிறது ஒன்றிய அரசு.
பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்படும் போதெல்லாம் ஆயிரக்கணக்கான கோடிகளை அந்த மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுத்த மோடி அரசு தமிழ்நாட்டிற்கு கிள்ளிக் கூட கொடுக்க மனமில்லாமல் இருக்கிறது.
தமிழ்நாட்டில் உறுதியாய் வெற்றி பெற மாட்டோம் என்கிற நம்பிக்கையில் தனது பழிவாங்கும் நடவடிக்கையை பட்ஜெட்டில் இருந்து துவங்கியுள்ளது பாஜக அரசு.
வஞ்சகமும் , சூழ்ச்சியும் நிறைந்த பட்ஜெட் .” என குறிப்பிட்டுள்ளார்.
