கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வேலுச்சாமிபுரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இன்று (அக்டோபர் 6) ஆய்வு மேற்கொண்டார் கமல்ஹாசன் எம்.பி.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக எம்.பிக்கள் குழு, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் என பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும், கரூர் சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தோருக்கும் ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன் இன்று கரூர் சென்றார். அவரை வரவேற்க மநீம கட்சியைச் சேர்ந்தவர்கள் சுமார் நூறு பேர் அப்பகுதியில் கூடியிருந்தனர்.

துயர சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் சாலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சென்று சில நிமிடங்கள் பார்வையிட்டார் கமல்ஹாசன் எம்.பி.

அப்போது செந்தில்பாலாஜியிடமும், அங்கிருந்த போலீசாரிடமும் என்ன நடந்தது என்பது குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.