ஆணவக்கொலைகளுக்கு கட்சிகள் மட்டும் காரணமல்ல, நம்முடைய சமுதாய அமைப்பு அப்படி இருக்கிறது என நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன் தெரிவித்தார்.
நமாநிலங்களவைக்கு திமுக கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் 25ஆம் தேதி பதவியேற்றார்.
அதன்பின்னர் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று வந்த அவர், இன்று (ஆகஸ்ட் 2) காலை சென்னை திரும்பினார்.

கட்சிகள் மட்டும் காரணமல்ல!
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “வெளியே இருந்து நாம் கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்த இடத்தை இப்போது உள்ளே இருந்து பார்க்கிறேன். அதில் இருக்கும் கடமையும், பெருமையும் புரிகிறது. தமிழ்நாட்டின் மீதும் எனது கவனம் இருக்கும்” என்றார்.
திமுக, அதிமுக என யார் ஆட்சிக்கு வந்தாலும், சாதி ஆணவப் படுகொலை தொடர்கிறதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “ஆணவக்கொலைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. இதற்கு கட்சிகள் மட்டும் காரணமல்ல, நம்முடைய சமுதாய அமைப்பு அப்படி இருக்கிறது. அதை முதலில் மாற்ற வேண்டும்” என கமல் பதிலளித்து சென்றார்.