’என்னை பார்ப்பனர் என விமர்சிக்கிறார்கள்” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் இன்று (செப்டம்பர் 18) தொடங்கி 4 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இன்று காலை சென்னை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வழக்கமாக ஒரு கட்சி நிகழ்ச்சி என்றால் தலைவர்கள் தான் மேடையில் அமர்வார்கள், நிர்வாகிகள் மேடைக்கு கீழ் அமர்வார்கள். ஆனால் இந்த முறை மேடைக்கு கீழ் முதல் வரிசையில் கமல்ஹாசன், மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம், துணை தலைவர்கள் மவுரியா, தனசேகரன், சினேகன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். மாவட்ட நிர்வாகிகளும், மண்டல அமைப்பாளர்களும் மேடையில் அமரவைக்கப்பட்டனர்.

அப்போது மாநில துணை தலைவர் மவுரியா பேசுகையில், “எந்த தலைவர்களும் செய்யாத ஒரு காரியத்தை செய்திருக்கிறார் நமது தலைவர் கமல்ஹாசன். மாவட்ட நிர்வாகிகளை மேடையில் அமரவைத்து, தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் கீழே அமர்ந்து அவர்களை பார்த்து ரசிக்கிறோம். இது அரிய வாய்ப்பு. கமல்ஹாசனின் நோக்கம் வருங்கால சந்ததியினரை தலைவராக்கி அழகு பார்ப்பதுதான். இப்போது நடக்கும் மண்டல நிர்வாகிகள் கூட்டம், கடந்த தேர்தலில் நாம் என்ன செய்தோம், என்ன செய்ய தவறிவிட்டோம்… அதையெல்லாம் நாம் அனைவரும் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
வரக்கூடிய தேர்தலில் மநீம மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெறுவதற்கு… என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும்… எப்படி செய்ய வேண்டுமென திட்டமிடுங்கள். அதே நேரத்தில் எந்த தொகுதியில் நமக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை ஆராய்ந்து தலைவரிடம் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட எந்ததெந்த தொகுதியை கேட்க வேண்டுமென தலைவர் முடிவு செய்வார்” என்று தெரிவித்தார்.
அப்போது சென்னை மண்டலத்தில் இருந்து வருகைத் தந்த மாவட்ட செயலாளர்கள் பலரும், தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. பூத் கமிட்டி வேலைகளையும் முடித்துவிட்டோம் என பதிலளித்திருக்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் பேசிய கமல்ஹாசன், “என்னை பார்ப்பனர் என்றும் திமுக டீம் என்றும் விமர்சிக்கிறார்கள். நான் எந்த டீமும் இல்லை. எனக்கு முதல் எதிரி சாதிதான். அதேபோல் எனக்கு தாய்மொழியான தமிழ் தான் முக்கியம். புதிய கல்விக் கொள்கை நமக்கு தேவையில்லை.
மாநில கல்வி கொள்கை தான் தேவை. தமிழ்நாடும் முக்கியம். தேசமும் முக்கியம். மாநிலம் இல்லாமல் நாடு இல்லை.
அனைத்து வீடுகளிலும் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை வாக்களிக்காதவர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைக்க வேண்டும்.

நாம் போட்டியிடும் தொகுதியாக இருந்தாலும், கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதியாக இருந்தாலும் வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும். பூத் கமிட்டி வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
மேலும் திமுக கூட்டணி குறித்து கமல் பேசுகையில், திமுக நீதிக்கட்சியில் இருந்து வந்தது. நம்முடைய கட்சி பெயரிலும் நீதி இருக்கிறது. இது கூட்டணி கிடையாது அதற்கு மேல் புனிதமானது’ என்றும் கூறியிருக்கிறார்.
இன்று மாலை காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.
நாளை காலை கோவை, மாலை மதுரை, நாளை மறுநாள் காலை நெல்லை, மாலை திருச்சி மண்டல நிர்வாகிகளுடனும், 21 ஆம் தேதி காலையில் விழுப்புரம், மாலையில் சேலம் மற்றும் புதுச்சேரி மண்டல நிர்வாகிகளுடனும் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தவுள்ளார்.