“நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஏற்கனவே படம் பண்ணிருக்கிறேன்.. பண்ணுவோம்” என கமல்ஹாசன் எம்.பி பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கவிருப்பதாகவும், அப்படத்தை இயக்குநர் லோகேஷ் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இருவரும் ’ஆம்’ என்ற க்ரீன் சிக்னல் பதிலை சூசகமாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன் இன்று (செப்டம்பர் 27) காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் “தமிழ்நாட்டை போல் தெலுங்கானாவிலும் கல்வி திட்டங்கள் கொண்டு வரப்படும் என ரேவந்த் ரெட்டி கூறி இருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு நீண்ட காலமாக செய்து வருகிறது. அன்னக்கொடி எப்போதோ பறந்தது. மறுபடியும் பறக்க விட்டது எனக்கு பெருமை. அதை மற்றவர்களும் பின்பற்றுவது தமிழ்நாட்டுக்கு பெருமை” என்றார்.
அதனைத் தொடர்ந்து நீங்களும், ரஜினியும் இணைந்து படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, “பண்ணியிருக்கோம், பண்ணுவோம்” என்று தன் பங்கிற்கு ஒரு க்ரீன் சிக்னல் பதிலைக் கொடுத்துவிட்டு புறப்பட்டார் கமல்.