ADVERTISEMENT

“பார்லிமெண்ட் மைக்கில் சிலரை கமல் புலம்ப வைத்துவிட்டார்” : ஸ்டாலின் கலகல

Published On:

| By Kavi

மீடியா மைக்கில் புலம்பிய சிலரை பார்லிமெண்ட் மைக்கிலும் கமல் புலம்ப வைத்துவிட்டார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின், இன்று (பிப்ரவரி 21) மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 

ADVERTISEMENT

கமல் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த ‘மறவோம்’ எனும் காந்தியடிகளைப் போற்றும்  நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு உரையாற்றினார்

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,  “ இன்று காலையில் இருந்து, ஐந்து, ஆறு அரசு நிகழ்ச்சிகள், மாலையில் ஒரு மிகப் பெரிய தேர்தல் களத்தில் பணியாற்றும் பாக முகவர்களின் மாநாடு, அதைத் தொடர்ந்து இந்த நிகழ்வு.

ADVERTISEMENT

நம்முடைய சகோதரர் கமலஹாசன் அழைப்பை நான் மறுக்க முடியுமா? நான் எண்ணிப் பார்க்கிறேன்… முரசொலியின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர் ஆற்றிய உரையும் இதுவரையில் என்னால் மறக்க முடியாது. அந்த நட்புணர்வோடுதான், சகோதர பாசத்தோடுதான், இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

கமல்  திரைப்படத்தில் ஒரு டயலாக் பேசியிருப்பார். “மறதி – ஒரு தேசிய வியாதி” என்று, அதுபோன்று, காந்தியடிகளையும் மக்கள் மறந்துவிடக் கூடாது என்றுதான், காந்தியின் வாழ்க்கையில், பெரிய திருப்புமுனையை – மன மாற்றத்தை ஏற்படுத்திய மதுரை மண்ணில், ‘மறவோம்’ என்கிற நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்திருக்கிறார்.

ADVERTISEMENT

நான் இந்த நிகழ்ச்சியை எவ்வாறு பார்க்கிறேன் என்று சொன்னால், தன்னுடைய ‘ஹே ராம்’ படத்திலும், காந்தியடிகளை கொல்ல வேண்டும் என்று கிளம்புகின்ற ஒரு கதாபாத்திரம் இறுதியில் திருந்துவதை காட்டியிருப்பார். வெறுப்பரசியலை மூர்க்கமாக திணிக்கும் ஒரு கட்சி – ஒரு கொள்கை, ஒன்றியத்தில் ஆளும் காலத்தில், காந்தியத்தை நம்முடைய நாடு இறுக பற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் நிகழ்வுதான், இந்த நிகழ்வு” என்றார். 

மேலும் அவர்,  “காந்தியடிகளை மக்களுடைய மனதில் இருந்து எப்படியாவது அகற்றிட வேண்டும் என்று இன்றைய ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு துடித்துக் கொண்டிருக்கிறது. காந்திய கொள்கைகளை அழிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து, இப்போது, காந்தி என்கின்ற பெயரே இருக்கக் கூடாது என்ற இடத்திற்கு அவர்கள் நகர்ந்திருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான், நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருந்து, காந்தியடிகள் பேரை நீக்கியது! அடுத்து, கரன்சி நோட்டில் இருந்தும் காந்தி படத்தை எடுத்தாலும் எடுத்துவிடுவார்கள்.

என்னைப் பொறுத்தவரை, ஒற்றைத்துவத்திற்கு எதிரானவர் காந்தி! இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி! மதநல்லிணக்கத்துக்கான மகத்தான மந்திரம் காந்தி! இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கருத்தியல்தான் காந்தி! “நான் கொல்லப்பட்டாலும் கூட ராம், ரகீம் என்கிற பெயர்களை அடிக்கடி உச்சரிப்பதை விடமாட்டேன். இரண்டும் ஒரே கடவுளின் பெயர்கள்” என்று சொன்னவர் காந்தி! இதனால்தான், மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்களுக்கு காந்தியை பிடிப்பதில்லை.

அண்மையில், பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு முதலமைச்சரே முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதை பார்த்திருப்பீர்கள். இதை சொல்லவே நமக்கு வெட்கமாக இருக்கிறது! ஆனால், எந்த வெட்கமும் இல்லாமல் இப்படியான செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கூட இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். கிறிஸ்துமஸ் அன்றைக்கு கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். மாற்றுத்திறனாளி என்றுகூட பார்க்காமல், சிறுமி மீது தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டிலும், இப்படிப்பட்ட சம்பவங்களை அரங்கேற்ற வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறார்கள். நம்முடைய அரசும், உங்களைப் போன்ற தோழமை கட்சிகளும் இருக்கும் வரை, அதை நாங்கள் நடக்க விடவே மாட்டோம்.

மன்ட்டோ என்ற புகழ்பெற்ற எழுத்தாளர், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறைய பார்த்து, என்ன சொன்னார் தெரியுமா? “முட்டாள்களே, இலட்சம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், இலட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்று எழுதாதீர்கள். 2 இலட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டனர் என்று எழுதுங்கள்” என்ற மனம் வெதும்பி சொன்னார்! அவர் சொன்னது சரிதான்! மதம் பிடிக்காமல் மக்களை பக்குவப்படுத்துவதுதான் மதங்களின் வேலை! மதவெறி புகுந்தால், முதலில் இறப்பது மனிதம்தான்! இதை நன்றாக உணர்ந்த காரணத்தினால்தால் வெறுப்பை புறந்தள்ளி, தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கின்றது!

மனிதத்தையும், மனிதர்களையும் அழித்து ஆட்சியை பிடிக்க நினைக்கின்ற பா.ஜ.க.வின் பிடியில் தமிழ்நாடு சிக்கக் கூடாது! இதற்காகதான் சொல்கிறேன், இந்த தேர்தல், தமிழ்நாடு vs NDA, அதில் தமிழ்நாடு வெல்லும்! பா.ஜ.க. வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டிற்கு தேவையே இல்லை! காந்தியடிகளின் மதநல்லிணக்கமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சமூகநீதி பார்வையும்தான் தமிழ்நாட்டிற்கு தேவை! இந்தியாவிற்கும் தேவை! அந்த அடிப்படையில்தான், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சகோதரர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்திருக்கிறது.

சிலர் சொல்லுவார்கள், சகோதரர் கமல் பேசுவது ‘எங்களுக்கு புரியவில்லை’ என்று, அவர்களுக்கு புரியாமல் இல்லை! ஆனால், புரிந்து கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்கள். மீடியா, மைக் முன்னால் புலம்பிக் கொண்டிருந்தவர்களை, இப்போது பார்லிமெண்ட் மைக்-லேயும் சகோதரர் கமல் புலம்ப வைத்துவிட்டார்! அதற்கு என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள்!

அதுமட்டுமல்ல, அவர் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் 9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில், சம நீதிக்காகவும், சமூக நீதிக்காகவும் உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும் என வாழ்த்துகிறேன்! “அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா” என்பது சகோதரர் கமலின் பாடல் வரி! அப்படி அன்பின் பாதையை வலியுறுத்திய காந்தியை மறவோம்! காந்தியின் கொள்கைகளை காக்க, வெல்வோம் ஒன்றாக” என்று குறிப்பிட்டார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share