முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவிற்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்! – திருமா, கமல் இரங்கல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Nallakannu

விடுதலை போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான நல்லகண்ணு இன்று (பிப்ரவரி 25) உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும், நடிகரும், மநீம தலைவருமான கமல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தனது எக்ஸ் பதிவில், “தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT

ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர்.

தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்.” என தெரிவித்துள்ளர்.

ADVERTISEMENT

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தகைசால் தமிழர் அய்யா ஆர்.என்.கே அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. அவர் நூறாண்டுகள் வாழ்ந்து நிறைவாழ்வை அடைந்தவர் என்றாலும், அவரது மறைவு நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.

மாபெரும் கொள்கை குன்றம் சரிந்தது! மகத்தான எளிமையின் சிகரம் சாய்ந்தது! அரசியல் தூய்மையின் பேரொளி மறைந்தது! பாட்டாளிகளின் உற்றத் தோழரின் மறைவு எவராலும் ஈடுசெய்ய முடியாதது! உழைக்கும் மக்களின் பாதுகாப்புப் பேரரணாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் தோழர் நல்லகண்ணுவிற்கு எமது செம்மாந்த வீரவணக்கம்!

ADVERTISEMENT

அவருடைய வயதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வயதும் ஒன்றே என்பது அவருக்கு வாய்த்த – தன்னியல்பாக அமைந்த ஒரு மகத்தான பெருமையாகும். அவர் இந்திய விடுதலை போராட்டத்தில் பள்ளிப் பருவத்திலேயே பங்கேற்று சிறைபட்டு ஈகம் புரிந்தவர். ஆங்கிலேய வல்லாதிக்க ஆட்சியாளர்கள் அவருக்குச் சொல்லொணா கொடுமைகளை இழைத்தனர். மிடுக்கான தோற்றம் கொண்ட அவரது மீசையைத் தீயால் சுட்டுப் பொசுக்கிய கொடூரத்தையும் அரங்கேற்றினர். அதிலிருந்து அவர் மீசை வைப்பதைக் கைவிட்டார் என்பது நம் கண்ணீரை உகுக்க செய்யும் குரூரமான வரலாறாகும்.

இந்தியப் பொதுவுடைமை கட்சியில் இணைந்து களமாடிய அவர்மீது “நெல்லை சதி வழக்குப்” புனையப்பட்டது. அதனையொட்டி சிறைப்படுத்தப்பட்ட அவர் சந்தித்த அடக்குமுறைகள் ஏராளம். சாதி,மதம் கடந்து உழைக்கும் மக்களை அமைப்பாக்கி அவர்களை அரசியல்படுத்தி வர்க்க விடுதலைக்கான புரட்சியை முன்னெடுக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டியவர்.

எளிமையான பொதுவாழ்வு; வலிமையான போர்க்குணம்; உறுதியான கொள்கை பிடிப்பு; பக்குவமான அணுகுமுறை போன்றவையே அவரது அடையாளங்கள் ஆகும்.

விடுதலைச் சிறுத்தைகளின் மீது பேரன்பைப் பொழிந்தவர். எப்போதும் என்னைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தியவர். சிறுத்தைகளின் “அம்பேத்கர் சுடர்” விருதினைப் பெற்றுக் கொண்டு எமக்குப் பெருமை சேர்த்தவர்.
“தகைசால் தமிழர்” என தமிழ்நாடு அரசால்- மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பாராட்டப்பெற்ற பெருந்தகை ஆவார்.

பொதுவாழ்வில், குறிப்பாக தேர்தல் அரசியல் களத்தில் இத்தகைய ‘தூய்மைமிகு பேராளுமை’ இனி எப்போது வாய்க்கும் என்னும் ஏக்கமே மிஞ்சுகிறது. எளிமை செம்மல் அய்யா நல்லக்கண்ணுவின் மறைவால் அரசியல் களத்தில் உருவாகியுள்ள வெற்றிடத்தைக் காலத்தாலும் இட்டு நிரப்ப இயலாது.

அவரது திருவுடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமென முதலமைச்சர் அறிவித்திருப்பது பெரும் ஆறுதல் அளிக்கிறது. இச்சூழலில் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய ஒன்றிய அரசு அவரது ஈகம் நிறைந்த பொதுவாழ்வையும்; தேசத்தின் விடுதலைக்கான அறப்போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் போற்றும் வகையில் அவருக்கு தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

முதுபெரும் தலைவர் தோழர் ஆர்என்கே அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட உற்றார் உறவினர்களுக்கும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share