மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் திமுக எம்.பிக்கள் இன்று பதவியேற்றனர்.
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பணியாற்றிய எம்.எம்.அப்துல்லா, வில்சன், சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவின் சந்திரசேகரன், பாமகவின் அன்புமணி ஆகியோரது பதவிக் காலம் நேற்று ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து தமிழக எம்பிக்கள் அனைவருக்கும் மாநிலங்களவையில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாநிலங்களவைக்கு திமுக கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், திமுகவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வில்சன் மற்றும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர் சல்மா, எஸ்ஆர் சிவலிங்கம் ஆகியோர் இன்று எம்.பிக்களாக பதவியேற்றனர்.
நடிகர் கமல்ஹாசன், தமிழ் மொழியில் உறுதி மொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டார். இந்த உறுதி மொழி வாசிப்பின் இறுதியில், ‘விழுமிய முறைமையுடன்’ உறுதி கூறுகிறேன் என குறிப்பிட்டார் கமல்ஹாசன்.
அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வரும் திங்கள்கிழமையன்று எம்.பிக்களாக பதவியேற்க உள்ளனர்.
டெல்லி செல்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று என் பெயரை பதிவு செய்ய இருக்கிறேன். இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமையை செய்ய இருக்கிறேன் என்றார்.