நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், இன்று (மார்ச் 13,) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார்.
கடந்த 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள், சுமார் ஓராண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நேரடி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:”எளிய மக்களுக்கான அரசியல் வாய்ப்பை உருவாக்கும் களத்தில் மீண்டும் இணைந்திருக்கிறேன். இந்தத் தேர்தலிலிருந்து எனது அரசியல் பயணம் புதிய வேகத்துடன் தொடரும்.”திராவிடக் கட்சிகளைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது அதிமுகவைத் தேர்வு செய்தது குறித்து கேட்டபோது அவர் கூறியது:”அதிமுக தலைமை ஏற்றுக்கொள்ளக்கூடியவர். ஒரு அடிப்படை குடும்பத்திலிருந்து, சாமானிய குடும்பத்திலிருந்து வந்து ஒரு தலைமையை எட்ட முடியும் என்ற ஜனநாயக சூழல் இருப்பதாலும், ஒரு தமிழனின் தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என்ற மன உறுதியோடு இருந்ததாலும் அதிமுகவைத் தேர்வு செய்தேன்.
மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், எனது இன மக்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யவும் இதுவே சரியான தளம் என மக்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.
கட்சி மாற ஏன் ஓராண்டு காலம் ஆனது என்ற கேள்விக்கு,”அரசியல் களத்திலிருந்து விலகியிருந்தாலும், விவசாயிகள் மற்றும் கடலோர மக்களின் போராட்டங்களில் தொடர்ந்து களத்தில் இருந்தேன். கடந்த ஆறு ஆண்டுகளாக அரசியலில் ஓயாமல் இயங்கியதால், எனது குழந்தைகளுடன் நேரம் செலவிடவும், ஓய்வெடுக்கவும் இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டேன்.”என தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து,”விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழல் ஆகியவற்றால் மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். வரவிருக்கும் தேர்தல் அதற்குரிய நற்பலனைத் தரும்” என தன்னம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “தேர்தலில் போட்டியிடுவது கட்சித் தலைமை முடிவெடுக்கும் எனவும், மக்களின் கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் முன்வைத்துள்ளதாகவும், அதற்கான நல்ல முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் காளியம்மாள் தெரிவித்தார். 2010-ஆம் ஆண்டு காலக்கட்டத்திலேயே அதிமுகவில் மாவட்டப் பொறுப்பில் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
