1955 இல் தெலுங்கில் வந்த ‘சந்தானம்’ என்ற படத்தின் கதையைத் தழுவி முன்னாள் முதல்வர் கலைஞர் திரைக்கதை வசனம் எழுத எஸ்எஸ் ராஜேந்திரன். தேவிகா, முத்துராமன், காஞ்சனா நடிப்பில் முரசொலி மாறன் தயாரிப்பு இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளியான படம் ’மறக்க முடியுமா’?
அந்தப் படத்தில் கவிஞர் சுரதா, திருச்சி தியாகராஜன், மாயவநாதன் ஆகியோருக்கு பாடல் எழுத வாய்ப்புத் தந்திருந்தார் கலைஞர் .
படித்தால் மட்டும் போதுமா படத்தில் வந்த ” தண்ணிலவு தேன் இறைக்க,.. ” பாடல், இதயத்தில் நீ படத்தில் வந்த ;” சித்திரப் பூவிழி வாசலில் ‘…” , பந்தபாசம் படத்தில் வந்த ”நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ?” போன்ற சிறப்பான பாடல்களை எழுதிய மாயவநாதனுக்கு இரண்டு பாடல்கள். மற்ற இருவருக்கும் ஆளுக்கு ஒரு பாடல் .
படத்துக்கு இசை மெல்லிசை மன்னர்களில் ஒருவராக இருந்த டி.கே. ராமமூர்த்தி.
கலைஞரைக் கவரும்படி பாடல்கள் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தில் ராமமூர்த்தியிடம் டியூன் சொல்லுங்கள் என்று கேட்டார் மாயவநாதன். ராமமூர்த்தி ஏனோ தாமதம் செய்தார். அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் மீண்டும் கேட்டும் டியூன் வராத நிலையில், பொறுமை இழந்த மாயவநாதன் , ” எப்ப தான் டியூன் கொடுப்பீங்க?” என்று அலுப்போடு கேட்க,
“என்னய்யா டியூன் டியூன் னு நச்சரிக்கிற? உன் பேரு என்ன மாயவநாதன் தானே?
மாயவநாதன்
மாயவநாதன்
மாயவநாதன்
மாயவநாதன்
இதோ டியூன் ” என்று அலட்சியமாக சொல்லி விட்டார் ராமமூர்த்தி. கொந்தளித்துப் போன மாயவநாதன் கலைஞரை சந்தித்து குமுறினார்.
”சரி நான் பாத்துக்கறேன் விடுங்க என்று சொன்ன கலைஞர், நேராக டி கே ராமமூர்த்தியிடம் போய் ”நான் ஒரு பாடல் எழுதி விட்டேன்” என்றார்.
”’நல்லது. கொடுங்க. அதற்கு நான் டியூன் போட்டுக் கொள்கிறேன் ” என்றார் ராமமூர்த்தி.
“அதான் டியூன் முன்னயே கொடுத்திட்டீங்களே. மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன். அதானே டியூன் ?” என்று கலைஞர் கேட்க திடுக்கிட்டுப் போனார் டி கே ராமமூர்த்தி.
புன்னகையோடு கலைஞர், “டியூனை மாத்த வேண்டாம். அந்த ‘ டியூனு’ க்கு தான் எழுதி இருக்கிறேன் ” என்றார்.
அந்தப் பாடல்தான் புகழ் பெற்ற ”காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்…” பாடல்.
இப்போது அந்த முழுப் பாடலையும்
” மாயவநா…..தன்
மாயவ…நா…. தன்
மாயவ நாதன்…..
மா….யவநாதன்” என்று பாடிப் பாருங்கள். மில்லி மீட்டர் சுத்தத்தில் முழுப்பாடலும் ஜொலிக்கும்.
அதன் பிறகு அதே படத்தில் “வானும் நிலவும்…” என்ற பாடலை மாயவநாதனயே எழுத வைத்தார்.
அதுதான் கலைஞர். அதனால்தான் அவர் கலைஞர்.
ராஜ திருமகன்

