தமிழில் ‘மின்சார கனவு’ படத்தில் பிரபுதேவா, அரவிந்த் சாமி உடன் நடித்தவர் கஜோல். நெடுங்காலம் கழித்து, தனுஷ் உடன் ‘வேலையில்லா பட்டதாரி 2’வில் தலைகாட்டியிருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘மா’, ‘சர்ஜமீன்’ ஆகிய இந்திப் படங்கள் வெளியாகின.
தொண்ணூறுகளின் பிற்பாதியில், டிவியில் கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவே கோக கோலா விளம்பரப் படங்கள் பார்த்தவர்களுக்கு நடிகை ட்விங்கிள் கன்னாவை நன்றாகத் தெரியும். ’சொல்லாமலே’ படத்தைத் தெலுங்கில் இயக்குனர் சசி உருவாக்கியபோது, அதில் வெங்கடேஷின் ஜோடியாக நடித்தவர் இவர்தான். அதனால் ‘சீனு’ நாயகி என்ற வகையில் மிகச்சிலருக்கு இவர் அறிமுகமாகும்.
சுருக்கமாகச் சொன்னால், தூர்தர்ஷனில் ‘ரங்கோலி’ நிகழ்ச்சியைக் கண்டுகளித்த எண்பதுகள், தொண்ணூறுகளைச் சேர்ந்தவர்களுக்கு கஜோல், ட்விங்கிள் கன்னா இருவரையும் நன்கு தெரியும்.
சுமார் ஐந்தாண்டு காலகட்ட இடைவெளியில் இருவரும் இந்திப் படங்களில் அறிமுகம் ஆனார்கள்.
இருவரது அன்னையரும் நடிகையர் தான். கஜோலின் தாய் தனுஜா எழுபதுகளிலும், ட்விங்கிளின் தாய் டிம்பிள் கபாடியா எண்பதுகளிலும் முன்னணி நாயகிகளாகத் திகழ்ந்தனர்.
இவர்கள் இருவருமே திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நாயகர்களைத்தான் திருமணம் செய்துகொண்டனர்.
கஜோலின் கணவர் அஜய் தேவ்கனும் சரி, ட்விங்கிளின் கணவர் அக்ஷய் குமாரும் சரி, திருமணத்திற்குப் பின்னர் தான் முன்னணி நாயகர்களாக உருவெடுத்தார்கள்.
கணவர், குழந்தைகள் என்றானபிறகும் கஜோல் நடிப்பைத் தொடர்ந்தார். இப்போதுவரை ‘லைம்லைட்’டில் இருக்கிறார்.
அக்ஷய் குமாரின் படங்கள் சிலவற்றைத் தயாரித்துள்ள ட்விங்கிள் கன்னா, ஆங்கிலத்தில் சில புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
இப்படி நிறைய ஒற்றுமைகள், சில வேற்றுமைகளைக் கொண்ட இவ்விரு ‘முன்னாள் ஹீரோயின்கள்’ளை ஒன்றிணைத்திருக்கிறது அமேசான் பிரைம்.
செப்டம்பர் 25 முதல் ஒளிபரப்பாகவிருக்கும் ‘டூ மச்’ (Too Much) எனும் ‘டாக் ஷோ’வில் இருவரும் இணைந்து விருந்தினர்களை ‘கலாய்க்க’ இருக்கின்றனர். ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
’எழுதி வடிவமைக்கப்படாததாக, வருத்தங்கள் தெரிவிக்கத் தேவையற்றதாக, படத்தொகுப்பில் எதுவும் வெட்டி எறியப்படாததாக, இந்த நிகழ்ச்சி இருக்கும்’ என்கிறது ‘டூ மச்’ குறித்த முன்னோட்டப் பார்வைகள்.
இருவருக்குமே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவம் கிடையாது. அதேநேரத்தில், பொதுவெளியில் கிண்டலும் கேலியும் நிறைந்த பதில்களைத் தருவதில் இருவருமே புகழ் பெற்றவர்கள்.
அதனால், இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமிருக்காது என்பதே ரசிகர்கள் சிலரது கருத்தாக உள்ளது.
இதன் முதல் எபிசோடில் அமீர்கான், சல்மான்கான் இருவரும் ஒன்றுசேர்ந்து பங்கேற்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆஹா ஓடிடியில் நடிகர் பாலகிருஷ்ணாவின் ’அன்ஸ்டாப்பபிள்’ ரொம்பவே பிரபலமாக உள்ளது. அதே பாணியில் வெவ்வேறு மொழிகளில் நிகழ்ச்சிகள் உள்ளன.
அந்த வரிசையில் கஜோல், ட்விங்கிளின் ‘டூ மச்’சும் சேரக்கூடும். யார் கண்டது?