முதல்வர் அண்ணனுக்காக பார்க்கிறேன்… : கோ.தளபதிக்கு ஜோதிமணி பதிலடி!

Published On:

| By Kavi

”நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள்… நான் கரூரில் இருக்கிறேன்… என்னை ஏன் சீண்டுகிறீர்கள்” எனறு கோ.தளபதிக்கு ஜோதிமணி எம்.பி. காட்டமாக பதிலளித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக -காங்கிரஸ் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, “மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் எம்பி ஆகிவிட்ட நிலையில் தற்போது ஆட்சியில் பங்கு வேண்டும் கேட்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் இனி சீட்டே கொடுக்கக் கூடாது. தலைமை புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இதனால் கோபமான மாணிக்கம் தாகூர் எம்.பி, “இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது” என்று காட்டமாக பதிவிட்டிருந்தார்.

அவரைத்தொடர்ந்து ஜோதிமணி எம்.பி.யும் கோ. தளபதிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இன்று (ஜனவரி 26) அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது.

நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது?

காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை  எமது தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை  கேட்கவில்லை.

அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள்  உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும்,  முதலமைச்சர் அண்ணனுக்காகவும் தான்  அனுசரித்துப் போகிறோம்.  அமைதி காக்கிறோம்.

கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன்.  வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share