உங்களின் கட்டு கதைகளுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் : ஓம்.பிர்லாவுக்கு ஜோதிமணி பதில்!

Published On:

| By Kavi

சபாநாயகர் ஓம்.பிர்லாவின் கட்டுகதைகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம் என்று ஜோதிமணி எம்.பி.கூறியுள்ளார். 

மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றாமலே குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில்,  மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா,  ‘பிரதமர் மோடியை தாக்க பெண் எம்.பி.க்கள் முயன்றனர்.  அவரை தாக்க சதி நடந்தது. எனவேதான் மோடியை அவைக்கு வர வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டேன் ’ என்று கூறினார். யார் தாக்க முயன்றார்கள் என்று ஓம்.பிர்லா பெயரை குறிப்பிடவில்லை. 

ADVERTISEMENT

பிரதமர் இருக்கையை முற்றுகையிட்டதில் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோர் இருந்திருக்கின்றனர். எனவே இவர்களைத் தான் ஓம்.பிர்லா சொன்னாரா என்று கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில் ஓம்.பிர்லா குற்றச்சாட்டுகளுக்கு தனது எக்ஸ் பக்கம் மூலம் பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி,  “ மக்களவை சபாநாயகர்  ஓம் பிர்லா குற்றச்சாட்டு அபத்தமானது. எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி இருதரப்பினரும் பேசவேண்டும். பிறகு பிரதமர் பதிலளிப்பார். இதுதான் வழக்கம்.நடைமுறை.

ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேச்சிற்குப் பயந்துகொண்டு அவரைப் பேசவிடாமல் பிரதமர்,அமைச்சர்கள்,சபாநாயகர் ஆகியோர் தடுத்தனர். நான்கு நாட்களாக எதிர்க்கட்சி தலைவர் மக்களவையில் பேச முடியவில்லை.

ADVERTISEMENT

நேற்று ஒரு பாஜக எம்.பி யை முன்னாள் பிரதமர்களைப் பற்றி ஆபாசமாகவும்,அறுவெறுப்பாகவும் பேச அனுமதிக்கின்றனர். இதுகுறித்து நாங்கள் சபாநாயகரைச் சந்தித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டோம். நடந்த மாபெரும் தவறை சபாநாயகர் மறுக்கவில்லை. போய்விட்டு நான்கு மணிக்கு வாருங்கள் என்று சொன்னார்.

நாங்கள் மீண்டும் நான்கு மணிக்கு சென்றபோது… நான் அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்களிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை” என்று சொல்கிறார். அப்படியென்றால் சபையை நடத்துவது யார்?

எதிர்கட்சியில் ஒருவர் கூட பேசாமல் ,பேச அனுமதிக்கப்படாமல் பிரதமர் எப்படி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசமுடியும்?

ஆளுங்கட்சியினரே பேசிக்கொள்வதற்கு இது ஒன்றும் பாஜகவின் கட்சி அலுவலகம் அல்ல. நாடளுமன்றம். அங்கே எங்களுக்கும்- எதிர்க்கட்சியினருக்கும் பேசுவதற்கு உரிமை உள்ளது. அந்த உரிமைக்காகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இதற்காக இந்தியா கூட்டணியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நேற்றும்,இன்றும் போராடினோம்..நாளையும் போராடுவோம்.

சீனா தாக்குதல்,இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்,எப்ஸ்டீன் பைல் இவை குறித்த பயம் தான் பிரதமரை அவைக்கு வரவிடாமல் தடுத்தது. நாங்கள் அதுதொடர்பான பதாகைகளை கையில் ஏந்தியிருந்தோம். உறுதியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். பிரதமர் எங்களை எதிர்க்கட்சியினரை எதிர்கொள்ளப் பயந்துகொண்டு தான் அவைக்கு வரவில்லை.

இதை மறைக்க இப்பொழுது சபாநாயகரின் பின்னால் ஒளிந்துகொண்டு பெண் எம்.பிகள் மீது பழிபோடுவது வெட்கக் கேடானது. நாங்கள் அன்பையும், அமைதியையும்,கண்ணியத்தையும் முன்னிறுத்துகிற காங்கிரஸ் கட்சியின் எம்.பிகள்.பாஜகவைப் போல வன்முறை,கலவரத்தை நம்புகிறவர்கள் அல்ல.

கோழைகள் தான் வன்முறையைக் கையில் எடுப்பார்கள்.நாங்கள் வீர மங்கைகள். போராளிகள். உங்கள் கட்டுக் கதைகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்.மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்துபோராடுவோம். உங்கள் பொய்க்கதைகளால் எங்களை முடக்க முடியாது” என்று கூறியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share