என் மகனுக்கு மொழிப்போராட்டத்தை சொல்லிக் கொடுக்காமல் கடமையில் இருந்து தவறிவிட்டேன் என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பங்கேற்று பேசினார். அப்போது, வேற்று மொழியை திணித்தால் ஏற்க மாட்டேன். தமிழகத்தின் மொழிப்போராட்டம் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பராசக்தி படத்தைப் பார்த்துவிட்டு மொழிப்போராட்டம் நடந்தது தெரியுமா என்று என் மகனிடம் கேட்டேன். “தெரியாது” என்று அவன் சொன்ன பதிலை கேட்டு நான் மிகவும் அவமானப்பட்டேன். மொழிப்போராட்டத்தைச் சொல்லிக் கொடுக்காமல் கடமையில் இருந்து தவறிவிட்டேன் என்றார்.
கீழடி அகழாய்வில் 3500 ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் மொழியாக தமிழ் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்புகள் நான்கு என்றார். நான்காவது குண்டூசி. மூன்றாவது இடத்தில் இருப்பது சக்கரம். சக்கரம் வரும் வரை மனிதன் கால்நடையாகத்தான் இருந்தான். இன்னும் சிலர் கால்நடையாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மூன்றாவது ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு சக்கரம். இரண்டாவது மின்சாரம். மனிதனின் முதல் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு மொழி. இதை யார் கண்டுபிடித்தார்கள் என்று யாரும் ஆராய்ச்சி செய்ய அவசியமில்லை. ஒருவர் கண்டுபிடித்த விஷயம் அல்ல; இது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மாபெரும் கண்டுபிடிப்பு என்பதுதான் என்றார்.
உலகெங்கும் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6000. அதில் எழுத்துமுறை கொண்ட மொழிகள் 200 ஐத் தாண்டவில்லை. அப்படியானால் கிட்டத்தட்ட 5800 மொழிகளில் புத்தகங்களே கிடையாது. அந்த 200 மொழிகளில் 120 முதல் 130 மொழிகளுக்கு அவர்களது சொந்த எழுத்துமுறை கிடையாது. அவர்கள் பிற மொழிகளின் எழுத்துமுறையை கடன் வாங்கி பயன்படுத்துகின்றனர் என்று மொழி குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
