தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்து ஜல்லிக்கட்டுப் புகழ் ஜூலி வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
சமீபத்தில் வேலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் சந்திப்பில், ஜல்லிக்கட்டு காளையைச் சிறுவன் ஒருவன் புல்லுக்கட்டைக் காட்டி அடக்கியதாக நடிகர் விஜய் ஒரு குட்டிக்கதையைக் கூறினார். இந்தக் கதைக்கு கண்டனம் தெரிவித்து நடிகை ஜூலி வெளியிட்ட வீடியோ, இணையத்தில் பெரும் வைரலானது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் அடையாளப்பட்ட ஜூலி, விஜய் ரசிகர்யாராவது புல்லுக்கட்டை எடுத்துக்கொண்டு காளையிடம் போகப்போய் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் திரும்ப போராட திராணி இல்லை என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலடியாக விஜய் ரசிகர்கள் ஜூலியைச் சமூக வலைதளங்களில் கடுமையாகச் சாடினர். விமர்சனங்களால் பின் வாங்காத ஜூலி, விஜய்யின் பாணியிலேயே பேசி அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்து வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்.
“எங்களுக்குத் தளபதி ஒருவர்தான்”
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜூலி, திராவிட அரசியலுக்கு ஆதரவாகவும் விஜய்க்கு எதிராகவும் அதிரடியான கருத்துகளை முன்வைத்தார். அவர் பேசியதாவது:
“நம்மை வளர்த்துவிட்ட திராவிட அரசை, டெல்லியில் இருப்பவர்கள் சிபிஐ ரெய்டுகள் மூலம் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த மாபெரும் இயக்கத்தை வீழ்த்தப் பார்க்கும் சூழ்ச்சிகளுக்கு எதிராக நான் குரல் கொடுக்க விரும்புகிறேன். இப்போது நிறைய திரைத்துறை ‘தளபதிகள்’ அரசியலுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். வாக்குகளைப் பிரித்து எப்படியாவது மாநிலத்தைக் கைப்பற்றிவிடலாம் என நினைக்கிறார்கள். இதை டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் செய்திருக்கலாம், ஆனால் இங்கே முடியாது.
தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாகவும் சிம்ம சொப்பனமாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை தளபதி என்றால் அது மு.க. ஸ்டாலின் மட்டும்தான்.
இது தமிழ்நாடு; ஒரு வலுவான திராவிடக் கோட்டை. எந்த ஒரு ‘ஸ்டார்’ கடப்பாரையைக் கொண்டும் இந்தக் கோட்டையை அசைக்கக் கூட முடியாது. இந்தக் கோட்டைக்கு முன்னால் எங்களைப் போன்ற சிறு தடுப்புகள் இருக்கிறோம். எங்களையே உங்களால் அசைக்க முடியாது. எவ்வளவு அவதூறுகளைப் பரப்பினாலும், கேரக்டரைத் தவறாகப் பேசினாலும் நாங்கள் எதற்கும் பயப்படப் போவதில்லை,” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஜூலியின் இந்த அதிரடிப் பேச்சு தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
