தமிழக வெற்றிக் கழகம் என்ன மாதிரியான கட்சி என்று நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் பெருந்துயரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அந்த வகையில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ், ‘அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
கரூரில் நடந்த துயரச் சம்பவத்துக்கு காரணமான பொறுப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் முன்பு இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘இந்த துரதிருஷ்டமான சம்பவத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துள்ளது. இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் என அனைவரும் இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் காவல்துறை எடுத்த நடவடிக்கை போதுமானதாக தெரியவில்லை. சம்பவம் நடந்த பிறகு அக்கட்சித் தலைவர் அங்கிருந்து பறந்து மறைந்து விடுகிறார்’என்று விஜய் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக நீதிபதி கோபத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ‘ அரசு மீது குற்றம் சாட்டுவது எளிது. தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் முதலில் டிசம்பரில் தான் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென, செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் நடத்தப்போவதாக 23ஆம் தேதி அனுமதி கேட்டு கடிதம் வழங்கினர்.
முதலில் கரூர் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டனர். அதைத்தொடர்ந்து மூன்று இடங்களை தேர்வு செய்து விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த இடங்களில் வேலுசாமிபுரம் தான் சிறந்த இடம் என்பதால் அங்கு போலீசார் அனுமதி வழங்கினர்.
பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை பிரச்சாரக் கூட்டம் நடத்திக் கொள்ள 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் பக்கத்தில், கரூரில் 12 மணிக்கு விஜய் வந்து உரையாற்றுவார்’ என்று தெரிவித்திருந்தது.
இதை நம்பி காலை முதலே மக்கள் வேலுசாமிபுரத்துக்கு வர தொடங்கி விட்டனர்.
தவறான நேரத்தை சொல்லி மக்களை கட்சியினர் தவறாக வழிநடத்தினர்’ என்று வாதங்களை முன் வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி செந்தில்குமார், ‘அப்படி என்றால் கூட்டத்தை மதிப்பிடுவதில் போலீஸ் அதிக எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருந்திருக்க வேண்டும் தானே ‘ என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘ விஜய் பிரச்சாரம் செய்த அதே வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அவரது கூட்டத்துக்கு 137 போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் தமிழக வெற்றிக் கழக கூட்டத்துக்கு 559 போலீசார் வரை பணியில் அமர்த்தப்பட்டனர் ‘ என்று பதிலளித்தார்.
இதையடுத்து நீதிபதி, ‘தவெக பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து சென்று இருசக்கர வாகனங்கள் பேருந்தின் கீழ் சிக்கிக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதை பேருந்து ஓட்டுநரும் பார்த்திருக்கிறார். ஆனால் பேருந்தை நிறுத்தவில்லை. இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? (Hit and run case). ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? போலீசார் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை? இதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்?
அரசு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கருணை காட்டுவது போல் தெரிகிறது. அந்தக் கூட்டம் தொடர்பான வீடியோக்களை அனைவரும் பார்த்து இருக்கிறார்கள். எல்லாம் யூடியூபில் பரவுகிறது. இது ஒரு கட்டுப்பாடற்ற கும்பல்.
41 பேர் இருந்ததற்காக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறும் போது, பேருந்தின் கீழ் வாகனங்கள் சிக்கியது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்வதிலிருந்து உங்களைத் தடுத்தது எது? ‘ என்று கேள்வி எழுப்பினார்
இதற்கு கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல், ‘நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம். எங்களை டிஸ்கரேஜ் செய்யாதீர்கள்’ என்று கூற நீதிபதி நான் உங்களை டிஸ்கரேஜ் செய்யவில்லை என்றார்.
மேலும் நீதிபதி, ‘இது எந்த மாதிரியான கட்சி. கட்சியில் உள்ள அனைவரும் அந்த இடத்தை விட்டு விட்டு ஓடி இருக்கிறார்கள். அந்தக் கட்சிக்கு ஏன் காவல்துறை எந்த நோட்டீசையும் அனுப்பவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்தது எது? கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் கூட ஏற்பாடு செய்யாதது ஏன்?
காவல்துறையினர் பொறுப்பாக இல்லை என்றால் யார் பொறுப்பாக செயல்படுவார்கள்’ என்று கூறி கரூர் நகர காவல் ஆய்வாளரை இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்த்தார்.
இந்நிலையில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரன் ஆஜராகி, கட்சித் தலைவர் ஜோசப் விஜய் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி , அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவிடம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் ‘ எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், ‘இது மனிதனால் உருவாக்கப்பட்ட பெரிய பேரழிவு. 41 அப்பாவி உயிர்கள் இழந்ததை பார்த்து நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது. நாங்கள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். நீதிமன்றம் அதன் பொறுப்பை தட்டிக்கழிக்காது.
இந்த நிகழ்வின் தொடர்ச்சியான விளைவுகளையும் முழு உலகமும் பார்த்திருக்கிறது.
சம்பவம் நடந்த பிறகு அந்த இடத்தை விட்டு கட்சித் தலைவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பலியாகி இருக்கும் நிலையில், அந்தக் கட்சி ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது அக்கட்சித் தலைவரின் மனநிலையை காட்டுகிறது. தலைவருக்கு தலைமை பண்பே இல்லை ‘ என்று தவெக-வை லெப்ட் & ரைட் வாங்கியுள்ளார் நீதிபதி.
தொடர்ந்து, கரூர் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட எக்ஸ் பதிவும் நீதிபதியிடம் காட்டப்பட்டது.
இதனை பார்த்து நீதிபதி, ‘ஒரு சின்ன வார்த்தை கூட பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?. போலீசார் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசு தரப்பில், ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி, ‘ஒரு புரட்சியை ஏற்படுத்துவது போல பதிவிட்டுள்ளார். இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தார்.
இறுதியாக கரூர் பெருந்துயரத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்ஜ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, இந்த குழுவில் மாவட்ட எஸ்பி-ஐ இணைத்து உத்தரவு பிறப்பித்தார்.
கரூர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீசருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளார் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஜோதிராமன் முன் இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பிலும், அரசு சார்பிலும் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் முன் ஜாமீன் வழங்க மறுத்து, மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் இருவரும் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம்.