“இனி அவர்கள் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை” – திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

Published On:

| By Kavi

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீதான விசாரணையை தொடரலாம் என்று நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கூறியுள்ளார். 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தார். 

ADVERTISEMENT

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று மனுதாரரான ராம ரவிக்குமார் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் மதுரை ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், கோயில் செயல் அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டனர்.

ADVERTISEMENT

அதேசமயம் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தனர். 

இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுகளுக்கு தடை விதித்தது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (மார்ச் 18) விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசு சார்பில், ‘தனி நீதிபதி முன்பு உள்ள அனைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கும் இரண்டு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு மனுதாரர் சார்பில், ‘ டிசம்பர் 4ம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மட்டுமே இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது’ என்று வாதம் முன்வைக்கப்பட்டது. 

இதைக் கேட்ட நீதிபதி ஜி .ஆர் சுவாமிநாதன், ‘முழு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த தடை உத்தரவில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் ஏப்ரல் 8ம் தேதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றுதானே கூறப்பட்டுள்ளது’ என தெரிவித்தார். 

அப்போது அரசு தரப்பில், ‘அனைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளையும் எதிர்த்து தொடரப்பட்ட உரிமையியல் மற்றும் இதர மனுக்களுக்கு பொதுவான இடைக்கால தடை பொருந்தும். மனுவில் கோரப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து பதிவுத்துறையிடம் கேட்டால் குழப்பம் தீரும்” என்று கூறப்பட்டது 

இதைக் கேட்ட நீதிபதி, ‘இரு நீதிபதிகள் அமர்வில் என்ன கேட்டீர்கள்’ என்று எனக்கு எப்படி தெரியும் என்று கூறியபோது, ‘பதிவுத்துறையிடம் அறிக்கை கேட்கலாம்’ என்று மீண்டும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதைக் கேட்ட நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், ‘அது என் வேலை இல்லை’ என்று தெரிவித்தார். 

மேலும், ‘ இரு நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் படியே செயல்படுவேன். இந்த உத்தரவுக்கு கீழ்ப்படிவது என் கடமை. உங்களை போல் அல்லாமல் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மரியாதை அளிப்பதில் நான் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனது உத்தரவுகள் வெளிப்படையாக மீறப்படுகின்றன. எனக்கு எதிராக உங்கள் எதிர்ப்பை காட்டாதீர்கள். இவ்வளவு பிடிவாதம் இருக்கக் கூடாது’ என்று தெரிவித்தார். 

இதற்கு அரசு சார்பில், ‘நீங்கள் ஏன் இப்படி நினைக்கிறீர்கள்?’ என்று நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், ‘காவல் ஆணையர், துணைக் காவல் ஆணையர் ஏன் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கவில்லையே. அவர்கள் தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்களா. இனிமேல் அவர்களின் முகத்தை கூட நான் பார்க்க விரும்பவில்லை. இதை சட்டப்படி கையாள்வேன்’ என்றார். 

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் தரப்பில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து தனி நீதிபதியே முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அந்த உத்தரவும், நேற்றைய இடைக்கால தடை உத்தரவும் முரண்படவில்லை.  

எனவே முழு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கும் தடையில்லை என்றே எடுத்துக் கொள்ள இயலும். அதன்படி, நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம். இந்த வழக்கு வரும் ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share