தேர்தல் நாளில் லீவு போட்டுவிட்டு படத்துக்கு சென்று விடுகிறார்கள் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி சுந்தர்ராஜன் கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கலந்து கொண்டார்.
அப்போது இட ஒதுக்கீடு, அரசியலமைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.
“நமது அரசியலமைப்புச் சட்டம் வயது வந்தோருக்கான வாக்குரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்கு போடுவதற்கு கூட அவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைத்து விடவில்லை. நீண்ட காலம் எடுத்துக் கொண்டது.
ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டம் அப்படி இல்லை. நமது அரசியலமைப்புச் சட்டம் வயது வந்த ஒவ்வொருவருக்கும் வாக்குரிமையை அளிக்கிறது.
நமக்கு ஜனநாயக உரிமையை கொடுத்து விட்டார்கள். ஆனால் சரியான ஆட்களை நாம் தேர்ந்தெடுக்கிறோமா. நம்மை சரியான ஆட்களை தான் ஆள வைக்கிறோமா?
இதை நாம் தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.
தேர்தல் நாளில் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு போய் விடுகிறோம். அல்லது சினிமாவுக்கு போய்விடுகிறோம். ஓட்டே போடுவதில்லை.
ஆனால் ஏதாவது ஒன்று நடந்தால் மட்டும் வாய் கிழிய பேசுகிறோம். ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு 50 சதவிகிதத்தை கூட தாண்டுவதில்லை.
50 முதல் 55 சதவீதம் வரை தான் வாக்குகள் பதிவாகின்றன. அப்படி என்றால் 45 சதவீதம் பேர் வாக்குச்சாவடி பக்கம் கூட போகவில்லை.
இப்படி இருக்கும்போது வயது வந்தோருக்கு வாக்குரிமை கொடுப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லாமல் போய்விடுகிறது.
உரிமை, உரிமை என்று பேசினால் மட்டும் போதாது. நமது கடமையும் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் இட ஒதுக்கீடு குறித்து பேசிய அவர், “இட ஒதுக்கீடு தான் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான ஒரு முக்கிய கருவி.
95 சதவிகிதம் எடுத்த ஒருவரை விட 70 சதவிகிதம் எடுத்த ஒருவருக்கு சீட் கிடைத்துவிட்டது. இதனால் 95 சதவிகிதம் எடுத்தவருக்கு கோபம். ஆனால் அந்த 70 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தவர் ஒரு காலில் ஓடியவர். 95 சதவிகிதம் எடுத்தவர் இரண்டு காலில் ஓடியவர். இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்
அனைவரையும் இரண்டு காலில் ஓட வைக்கும் வரை இந்த இட ஒதுக்கீட்டை நம் நாட்டில் இருந்து எடுக்கவே முடியாது.
இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால் தரம் குறைந்துவிட்டது என்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இட ஒதுக்கீடு கொடுத்ததால் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி என அனைத்து பிரிவிலிருந்து வருபவர்களும் பிரமாதமாக செயல்படுகிறார்கள். நாடு வளர, அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.