பாமக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அன்புமணியிடமும், ராமதாஸிடமும் கருத்துகளை கேட்டறிந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல்போக்கு நீடித்து வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்தார். அவருக்கு போட்டியாக அன்புமணியும் ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்தார்.
அன்புமணி அறிவித்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ராமதாஸ் நியமித்த பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் தாக்கல் செய்த மனுவில், “அன்புமணி தன்னைத்தானே தலைவர் என்று சொல்லிக்கொண்டு செயல்படுகிறார். தலைவராக அன்புமணியின் மூன்று ஆண்டு பதவிக்காலம் மே 28, 2025 அன்று முடிவடைந்ததுவிட்டது. இந்தநிலையில் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 7, 2025 அன்று நடைபெற்றது, அப்போது 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களின்படி, கட்சியின் துணை விதிகள் திருத்தப்பட்டன. அதாவது தலைவரின் பதவிகாலம் முடிவடைந்தால், நிறுவனரே தலைவராகலாம் என்று விதி திருத்தப்பட்டது. அதன்படி, பொதுக்குழுவை கூட்ட ராமதாஸுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.
இந்தசூழலில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் கட்சி சட்டவிதிகளுக்கு விரோதமாக அன்புமணி பொதுக்குழுவை அறிவித்திருக்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஆகஸ்ட் 8) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “ராமதாஸும், அன்புமணியும் இன்று மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் உள்ள எனது சேம்பருக்கு தனியாக வர வேண்டும். தனக்கும் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது வழக்கறிஞர்கள் உட்பட வேறு யாரும் இருக்கக்கூடாது. இந்த வழக்கை என்னால் 5 நிமிடத்தில் முடித்துவிட முடியும். ஆனால் இருவரின் நலன் கருதி இந்த வேண்டுகோளை வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்த தகவலை ராமதாஸ் பிஏ சாமிநாதன், அவரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் எனக்கு உடல் சோர்வாக இருக்கிறது. நான் செல்ல முடியாது என்று கூறி ஒரு கடிதம் மட்டும் நீதிபதிக்கு அனுப்பியிருக்கிறார்.
இந்தசூழலில் நீதிபதியின் அறிவுறுத்தலை ஏற்று நேரடியாக நீதிமன்றத்துக்கு சென்ற அன்புமணி 5.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறைக்குள் சென்றார்.
நீதிபதியிடம் ராமதாஸ் கொடுத்த கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ‘உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். ஆனால் எனது உடல்நிலை சரியில்லை என்பதால் என்னால் நேரடியாகவரமுடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை படித்து பார்த்த நீதிபதி, ‘காணொளி காட்சி மூலம் ஆஜராகலாம்’ என்று கூறினார்.
இந்தநிலையில் நீதிமன்றத்தை மதித்து ராமதாஸ் வீடியோ கால் மூலம் ஆஜரானார். ராமதாஸிடம் சுமார் 10 நிமிடமும், அன்புமணியிடம் சுமார் 1 மணி நேரமும் நீதிபதி பேசினார். அதன் பிறகு நீதிபதி அறையில் இருந்து வெளியே வந்த அன்புமணி ராமதாஸ் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இந்தநிலையில் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் கோபு கூறுகையில், “இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்திய நீதிபதி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதாலும் இரு தரப்பையும் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பது நீதிமன்றத்தின் பணி என்பதாலும் இருவரையும் நேரில் அழைத்தார்.
உடல்நிலை சரியில்லாததால் காணொளி வாயிலாக ஆஜரான ராமதாஸ், பாமக மகளிர் மாநாடு நடைபெறும் வரை பொதுக்குழுவுக்கு அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் எந்த முடிவையும் இப்போது வரை நீதிபதி சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.
நீதிபதி அறையில் என்ன நடந்தது என்ன என்று பாமக வழக்கறிஞர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது,
“அன்புமணி நீதிபதியிடம், நான்தான் கட்சியின் தலைவர். பெரும்பான்மையான நிர்வாகிகள் என்னிடம் தான் இருக்கிறார்கள். என்னுடைய அலுவலக முகவரியைத் தான் பாமக அலுவலகமாக தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. நாளை நடைபெறும் பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ் கொடுத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். ஐயாவின் வழிகாட்டுதல் படிதான் கட்சியை நடத்துவோம். எந்த சூழலிலும் அவரை அவமதிக்கவில்லை” என்று கூறினார்.
அதுபோன்று ராமதாஸ், “கட்சியின் நிறுவனர் நான்தான். எனக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். நான் இல்லாமல் பொதுக்குழு நடத்தக்கூடாது. நாளை மறுநாள் பூம்புகார் மகளிர் மாநாடு நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் பொதுக்குழுவை நடத்தக்கூடாது. நான் உயிருடன் இருக்கும் வரை பாமகவின் நிறுவனரும், தலைவரும் நான்தான் என்று கூறினார்” என்றனர்.
இருவரிடமும் பேசியதை தொடர்ந்து தலைமை நீதிபதியை சென்று சந்தித்து வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மீண்டும் அரசு தரப்பு, அன்புமணி தரப்பு, ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்களை அழைத்து விசாரித்து வருகிறார்.
இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் நாளை பொதுக்குழு நடைபெறும் என்று அன்புமணி தரப்பினர் கூறுகின்றனர்.