வைஃபை ஆன் செய்ததும், ‘டெல்லிக்கு போறது என்னமோ டவுனுக்கு போய்ட்டு வர்ற மாதிரி ஆகிடுச்சு’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்…
இப்ப யாருப்பா டெல்லி போயிட்டு ரிட்டர்ன் ஆனது?
டெல்லிக்கு நயினார் நாகேந்திரன் போயிருப்பதாக சொன்னோமே…
ஆமா.. என்ன சங்கதியாம் டெல்லியில்?
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை மட்டுமே நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியிருக்கிறார். இது பற்றி டெல்லி சோர்ஸ்களிடம் பேசிய போது, “நயினார் நாகேந்திரனுடன் ரொம்பவே சீரியசாகத்தான் நட்டா பேசினாரு.. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஓபிஎஸ் எல்லோரும் ஒன்றாக இருக்கனும்.. இது விஷயமாக எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனிடம் மீண்டும் நீங்க பேசுங்க என நயினாருக்கு ஆர்டர் போட்டாராம் நட்டா” என்கின்றன.
நயினார் மேலதான் டிடிவி செம்ம கோபத்தில் இருக்கிறாரே?
என்னதான் கோபத்தில் இருந்தாலும், “டிடிவியை சந்தித்து சிஎம் வேட்பாளர் பற்றி இப்ப பேச வேண்டாம்.. அதெல்லாம் அமித்ஷா ஜி பார்த்துக்குவாரு.. பின்னாடி அதுபற்றி பேசலாம்.. முதல்ல கூட்டணிக்கு வாங்கன்னு பேசுங்க” என நயினாருக்கு கிளாஸ் எடுத்து அனுப்பினாராம் நட்டா.
எடப்பாடிக்கு டெல்லி என்ன மெசேஜ் வைத்திருக்கிறதாம்?
டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்ப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, மேலோட்டமாக அவங்க ரெண்டு பேரையும் பாஜக கூட்டணியில் சேர்த்துக்குங்கன்னு சொல்லிட்டார்.. ஆனாலும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவருமே பாஜக கூட்டணியில் இருப்பதை ஏற்க முடியாமல்தான் இருக்கிறாராம் இபிஎஸ்.. அதனால்தான், “அப்படி எல்லாம் நினைக்காதீங்க.. எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கலாம்.. டெல்லி தலைவர்கள் அதை பார்த்துக்குவாங்க.. வலிமையான கூட்டணிதான் இப்ப நமக்கு தேவை.. அதைத்தான் டெல்லியும் விரும்புதுன்னு சொல்லுங்க” ன்னு நயினாரிடம் சொல்லி இருக்கிறார் ஜேபி நட்டா.
ஓஹோ.. நயினார் ஏதும் சொல்லலையா?
நயினார் நாகேந்திரன, “ஶ்ரீவில்லிபுத்தூரில் அக்டோபர் 11ந்- தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்க போறேன்.. அன்றைய தினம் டெல்லியில் இருந்து முக்கிய தலைவர்கள் யாராவது வந்தால் சிறப்பாக இருக்கும்.. நீங்களோ அல்லது மத்திய அமைச்சர்களோ வரனும்” என கேட்டுகிட்டாராம் நயினார் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.