திமுகவின் முப்பெரும் விழாவில் எம்.பி.கனிமொழி உட்பட விருது பெற்றவர்களை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி பேசினார்.
கரூரில் இன்று (செப்டம்பர் 17) திமுக முப்பெரும் விழா நடைபெற்றது.
அப்போது விருது பெற்றவர்களை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின், “பெரியார் விருது வாங்கிய என் தங்கையை பார்த்தால் கனிமொழி, நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி. திராவிட இயக்கத்தின் திருமகளாக, பெரியாரின் பேத்தியாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கிறார்.
அண்ணா பெயரிலான விருதை சுவ.சீதாராமன் பெற்றார். அரசு ஊழியராக இருந்த இவரை ராஜினாமா செய்துவிட்டு, கழக பணியாற்ற வா என்று கலைஞர் அழைத்தார். எப்போதும் கலைஞரின் சொல்லை தட்டாதவர் சுவ.சீதாராமன்.
அடுத்ததாக சோ.மா.ராமச்சந்திரன் கலைஞர் விருதை பெற்றார். மிசா காலத்தில் ஓராண்டு காலம் என்னுடன் கொட்டடியில் இருந்தவர் சோ.மா.ராமச்சந்திரன் என்பது எனக்கு கிடைத்த பெருமை.
பாவேந்தர் பாரதிதாசன் விருதை மறைந்த குளித்தலை சிவராமன் குடும்பத்தில் பெற்றிருக்கிறார்கள். கலைஞர் முதல்முறையாக போட்டியிட்ட குளித்தலையை சேர்ந்தவர் அவர். அவருக்கு சிறப்பு செய்ய அறிவிக்கப்பட்ட விருதை அவரால் பெற முடியாமல் போயிருந்தாலும், நம்முடைய இதயங்களில் குடியிருக்கிறார்.
அடுத்து பேராசிரியர் விருதை பெற்ற மருதூர் இராமலிங்கம், கலைஞரின் கட்டளைகளை தவறாமல் செயல்படுத்தியவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாமல் பாடுபட்டவர். இன்றைக்கும் உழைத்துக்கொண்டிருக்கிறார்.
என்னுடைய பெயரிலான விருதை பெற்ற பொங்கலூர் பழனிசாமி, மொழிப்போராட்டத்தை உருவாக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர். கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அவருடையை லெட்டர் பேடிதால் கோரிக்கை ஏற்கப்பட்டது என கலைஞர் தன் கைப்பட எழுதினார்.
அடுத்ததாக முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் பெயரிலான விருதை பெற்றிருப்பவர் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளார் ஏ.எஸ்.பன்னீர் செல்வன். திராவிட இயக்கம் வலியுறுத்தி வரும் சமூக நீதியை, மானுட பற்றை, மனித உரிமை சிந்தனைகளை ஆங்கில ஊடகங்களில் எழுதி வருபவர். விருது பெற்றிருக்கக்கூடிய ஒவ்வொருமே ஒவ்வொரு விதத்தில் பெருமைக்குரியவர்கள்.
எனவே விருது பெற்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்”என்றார்.