ஜோஜு ஜார்ஜின் ‘பணி’ படத்தின் இரண்டாம் பாகம்.. டைட்டில் ரெடி..!?

Published On:

| By uthay Padagalingam

joju george pani 2's title ready?

மலையாளத் திரையுலகில் சிறு பாத்திரங்களில் தலைகாட்டி, மெல்ல குணசித்திர நடிகராக வளர்ந்து, இன்று தனக்கென்று தனி ‘மார்க்கெட்’டை கொண்ட நாயகனாகத் திகழ்பவர் ஜோஜு ஜார்ஜ். இவர் நடித்த ‘ஜோசப்’, ’மதுரம்’, ‘நாயாட்டு’ போன்ற படங்கள் சினிமா நட்சத்திரங்களும் கொண்டாடுபவை. ‘பபூன்’ தொடங்கி ‘ஜகமே தந்திரம்’, ‘தக் லைஃப்’, ‘ரெட்ரோ’ எனத் தமிழிலும் இவர் நடித்து வருகிறார். joju george pani 2’s title ready?

‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ஜோஜு ஜார்ஜ் நடித்த இரட்டா படம் பார்த்து தான் ஆச்சர்யப்பட்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். உருவத்தில் பெரிதாக வித்தியாசம் இல்லாத இரட்டையர் பாத்திரங்களைத் தனது நடிப்பால் மிகத்தெளிவாக வேறுபடுத்திக் காட்டியதாகப் பாராட்டினார்.

மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஜோஜு ஜார்ஜின் ஆதர்சம் நம்மூர் கமல்ஹாசன் தான். நடிப்பில் மட்டுமல்லாமல், அவரது வழியைப் பின்பற்றி இயக்கத்திலும் கால் பதித்தார்.

கடந்த ஆண்டு ’பணி’ என்ற படத்தை இயக்கி நடித்தார். ’கேங்ஸ்டர் ட்ராமா’வாக அமைந்த இப்படம் தியேட்டர்களில் மட்டுமல்லாமல் ஓடிடியிலும் பெருவெற்றியைப் பெற்றது. ’பணி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருவதாக, ஏற்கனவே ஜோஜு ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அந்த படத்திற்கு ‘டீலக்ஸ்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக மலையாளத் திரையுலகில் ஒரு தகவல் உலவுகிறது. ‘பணி’ படத்தில் ஜோஜுவின் பாத்திரப் பெயர் ‘டீலக்ஸ் பென்னி’. அதனை முன்வைத்தே இந்த பெயர் வைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், முதல் பாகத்தில் இடம்பெற்ற பாத்திரங்கள், சூழல் அல்லாமல் வேறுவிதமான கதை இதிலிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதே பாணியில் ‘பணி’ படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஜோஜு ஜார்ஜ் இருக்கிறாராம். ‘கேங்ஸ்டர் ஆக்‌ஷன் ட்ராமா’ வகைமையில் ஒரு ‘ட்ரையாலஜி’யாக அமையும் வகையில் இப்படங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

‘பணி’ படமே எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத் தந்தது. அந்த வகையில், இப்படங்களின் மீதான எதிர்பார்ப்பு நிச்சயம் பல மடங்கு இருக்கும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share