”ஒரு அரசியல் கட்சியின் பி அணியாக இருக்கும் தேர்தல் ஆணையங்களை நடத்துவதற்கு நாம் ஏன் இவ்வளவு வரிகளை செலுத்த வேண்டும்?” என ஜாண் பிரிட்டாஸ் இன்று (ஆகஸ்ட் 18) காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக அடங்கிய இந்தியா கூட்டணி போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ராகுல்காந்தி எழுப்பி வரும் குற்றச்சாட்டு பதிலளித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார்.
அப்போது அவர் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார். மேலும் ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், கையொப்பமிடப்பட்ட பிரமாணப் பத்திரத்தை அடுத்த 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் செல்லாதவை என்று கருதப்படும் என அறிவித்தார்.
அத்துடன், வீட்டு முகவரி எப்படி 0 என குறிப்பிடப்பட்டது என்ற கேள்விக்கு, “நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள், ஆனால் நாட்டில் வீடு இல்லாதவர்கள் பலர் இருக்கிறார்கள். பாலத்தின் கீழ், சாலையோரமாக இரவில் பலர் தூங்குகின்றனர். அவர்களுக்காக 0 என்ற’ முகவரி கொடுக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
ஞானேஸ்குமாரின் இந்த விளக்கம் அபத்தமானது என்று கூறி, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டு வர இந்திய கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அனாதை பெற்றோரின் பெயர் ABCDEFG ஆ?
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் இன்று ஏஎன்ஐ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ”தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ’கோடிக்கணக்கான மக்கள் தெருக்களில் இருக்கிறார்கள், அவர்களுக்கு வீடுகள் இல்லை’ என குறைந்தபட்சம் ஒரு உண்மையையாவது கூறியுள்ளார். அவர்களின் வீட்டு எண் தான் 0 என குறிப்பிட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார். அப்படியென்றால் பெற்றோர் இல்லாத கோடிக்கணக்கான மக்கள் அனாதைகளாக இருக்கிறார்கள், அதனால்தான் அவர்களின் பெற்றோரின் பெயர் ABCDEFG என்று அவர் கூறுவாரா? அதையும் அவர் விளக்க வேண்டும்” என்றார்.
அரசியல் கட்சியின் பி அணி!
மேலும், “இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சமாக இருக்கிறது, நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட தேர்தல் ஆணையம் நேர்மையாக இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி போல நேற்று பேசினார். அரசியலமைப்பு நிலைப்பாட்டின் மீதான நம்பிக்கையை நாடு இழந்துவருகிறது. அரசியல் கட்சியின் பி அணியாக இருக்கும் தேர்தல் ஆணையங்களை நடத்துவதற்கு நாம் ஏன் இவ்வளவு வரிகளை செலுத்த வேண்டும்?” என ஜாண் பிரிட்டாஸ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.