‘த்ரில்லர்’ படங்களில் ஜீத்து ஜோசப்பின் முத்திரை!
உலகம் முழுக்க ‘த்ரில்லர்’ வகைமையில் சிறப்பான படங்களைத் தந்த பல இயக்குனர்கள் உண்டு. தமிழில் டி.ஆர்.ராமண்ணா, மணிவண்ணன் உட்படப் பலர் அப்படிப்பட்ட படைப்புகளைத் தந்திருக்கின்றனர். த்ரில்லர் வகைமையில் வெவ்வேறுவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகிற கதைகளை அவர்கள் திரையில் சொல்லியிருக்கின்றனர். அந்த வகையில், சமீபகாலமாக இந்திய அளவில் பெயர் சொல்கிற அளவுக்கு வளர்ச்சியை எட்டியிருக்கிற ஒரு இயக்குனராகத் திகழ்கிறார் ஜீத்து ஜோசப். மெமரீஸ், த்ருஷ்யம், தி பாடி, தம்பி, கூமன், நெரு, நுனக்குழி என்று தொடர்ந்து அவர் தனது முத்திரையைப் பதித்த படங்கள் நம்மை திரையோடு ஒன்றச் செய்வதாக இருந்தன.
ஆசிஃப் அலி, அபர்ணா பாலமுரளி, சரவணன், சம்பத் ராஜ், மதன் தட்சிணாமூர்த்தி உட்படப் பலரது நடிப்பில், விஷ்ணு ஷியாம் இசையமைப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ளது ‘மிராஜ்’ திரைப்படம். இதுவும் ‘த்ரில்லர்’ கதைதான்.
சரி, ‘மிராஜ்’ தருகிற ’த்ரில்’ எத்தகையது?

பல திருப்பங்கள்!
கோயம்புத்தூரில் ஒரு இளம்பெண் தனது காதலன் காணாமல் போனதாகக் காவல் துறையில் புகார் கொடுக்கிறார். இருவரும் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள்.
அந்த நிறுவனத்தில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை நடப்பது அந்த நபருக்குத் தெரியும். அது பற்றிய விவரங்களை, அவர் ஒரு காவல் துறை அதிகாரியிடம் தருவதாக உறுதியளிக்கிறார்.
அந்த அதிகாரி அப்பெண்ணைத் தேடி வருகிறார். ‘உன்னோட காதலன் வச்சிருக்குற ஹார்ட் டிஸ்க் பற்றி தகவல் தெரிஞ்சா எனக்குதான் கொடுக்கணும்’ என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.
அதனைத் தொடர்ந்து, அப்பெண் வேலை செய்யும் நிறுவன உரிமையாளர் ஒரு ரவுடியை அனுப்புகிறார். அந்த நபர் அப்பெண்ணை மிரட்டி, ‘ஹார்ட் டிஸ்கை ஒழுங்கா கொடுத்துடு’ என்கிறார்.
அதன்பிறகு, ஒரு ஆன்லைன் ஜர்னலிஸ்ட் அப்பெண்ணின் வீட்டிற்கு வருகிறார். ‘இந்த ஸ்கேம் பத்தி பப்ளிஷ் பண்ணத்தான் நானும் உன் லவ்வரை பாலோ பண்ணேன்’ என்கிறார்.
இந்த நிலையில், ஒரு ரயில்விபத்தில் அந்த காதலன் இறந்ததாகச் செய்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, காதலன் வைத்திருந்த ஹார்ட் டிஸ்கை அப்பெண் தேடத் தொடங்குகிறார். அது ஒரு பெரும்பயணத்தை மேற்கொள்ள வைக்கிறது. அதில் அப்பெண்ணின் தோழி மற்றும் அந்த பத்திரிகையாளர் இருவரும் இருக்கின்றனர்.
‘யாரும் எவரையும் நம்ப முடியாது’ என்கிற சூழலில் அவர்கள் அனைவருமே இருக்கின்றனர்.
அடுத்தடுத்து நடக்கிற சில நிகழ்வுகள் அனைவருமே ஏதோ ஒரு உண்மையை தம் மனங்களில் ஒளித்து வைத்திருப்பது தெரிய வருகிறது. அந்த உண்மைகள் ஒவ்வொன்றும் பல திருப்பங்களுக்குக் காரணமாகின்றன.
இந்த நிலையில், தனது காதலன் உண்மையில் சாகவில்லை என்பதை அறிகிறார் அந்தப் பெண்.
அதன் பிறகு அவர் என்ன செய்தார்? அந்த காதலன் ஏன் அவரை ஏமாற்ற நினைக்க வேண்டும்? அந்த ஹார்ட் டிஸ்க் யார் கையில் இறுதியாகக் கிடைத்தது? இந்த கதையில் ஏமாளி அல்லது அப்பாவி யார்? இப்படி நம் மனதில் எழுகிற கேள்விகளுக்குப் பலப்பல திருப்பங்களுடன் திரையில் பதில் சொல்கிறது ஜீத்து ஜோசப்பின் ‘மிராஜ்’.

’த்ரில்’ போதுமா?
’மிராஜ்’ கதையை அபர்ணா ஆர்.தரக்காட் எழுதியிருக்கிறார். நிதி நிறுவனத்தில் நடக்கிற சட்ட மீறல் செயல்பாடுகள், அதிகார பலத்தின் துணையோடு அதனை நடத்துகிற ஒரு பெரிய மனிதர், அவரது நிறுவனத்தின் வழியே பெரும்பணம் சம்பாதிக்கத் திட்டமிடுகிற ஒரு ‘குயுக்தி’யான இளைஞன், அவரது கைப்பாவையாக இருக்கும் காதலி, அப்பெண்ணின் தோழி, இவர்களுக்கு எந்தவிதம் சம்பந்தமும் இல்லாதவராகத் தோன்றும் ஒரு பத்திரிகையாளர் என்று மிகச்சில பாத்திரங்கள் கொண்டு கதையில் சூடேற்றியிருக்கிறார்.
இந்த கதையில் உலவுகிற பாத்திரங்களின் மனப்பாங்கு, அவற்றின் உடல்மொழி, உண்மைகளைப் பேச்சில் மறைக்கிற லாவகம் கொண்டு அடுத்தடுத்து வெவ்வேறு திசை நோக்கி நகர்கிற காட்சிகளின் துணையோடு திரைக்கதை பரபரக்கிறது. ஸ்ரீனிவாசன் அப்ரோல் உடன் இணைந்து அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
அவரது காட்சியாக்கத் திறன் கனகச்சிதமாக இருப்பதால், இந்த படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கிளைமேக்ஸில் தோன்றுகிறது. அதன் வழியே, இந்த படத்தைப் புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறார். அதுவே இப்படத்தின் வெற்றி.
அதற்கு, ஒரு காட்சிச் சூழலை இருவேறு உணர்வு வெளிப்பாடுகளுடன் பொருத்திப் பார்க்கிற அளவுக்கு வடிவமைக்கிற திறமை அவசியம். அது அவரிடம் நிறையவே இருப்பதைக் காட்டுகிறது ‘மிராஜ்’.

காட்சிகளுக்குப் பொருத்தமான ஒளிப்பதிவு, திரையில் செறிவோடு ஒவ்வொரு பிரேமையும் வடிவமைப்பதற்கான தயாரிப்பு வடிவமைப்பு, கண்களை திரையை விட்டு விலக்க முடியாத அளவுக்குச் செறிவுடன் கதை சொல்ல வைத்த படத்தொகுப்பு, ஒட்டுமொத்த கதை சொல்லலையும் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லத் துணை நின்ற பின்னணி இசை என இப்படத்தில் உள்ள ஒவ்வொரு தொழில்நுட்ப அம்சமும் ‘ஆஹா’ ரகத்தில் இருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் சதீஷ் குரூப், படத்தொகுப்பாளர் விநாயக், தயாரிப்பு வடிவமைப்பாளர் பிரசாந்த் மாதவ், இசையமைப்பாளர் விஷ்ணு ஷியாம் மற்றும் டிஐ பணியில் ஈடுபட்டவர்கள் உட்படப் பலர் அதன் பின்னணியில் இருக்கின்றனர்.
இந்த படத்தின் பட்ஜெட் ‘மீடியம் லெவல்’ என்றாலும், அது படம் பார்க்கையில் நமக்கு உறுத்தலாகத் தெரிவதில்லை. இயக்குனருக்குக் கிடைத்த வெற்றி அது.
நாயகன் ஆசிஃப் அலி, நாயகி அபர்ணா பாலமுரளி என்றபோதும், அவர்களுக்கு இடையே டூயட் பாடல் மட்டுமல்லாமல் ‘ப்ளிர்ட்டிங்’ வகையறா காமெடி கூடத் திரைக்கதையில் இல்லை. ’செண்டிமெண்ட்’ டச் கூட கிடையாது. இப்படிக் கதை சொல்வதற்கு நிறையவே ‘தில்’ வேண்டும்.
ஆக்ஷன் காட்சிகளுக்கான ‘பஞ்ச்’ வசனங்களோ, வாய் விட்டுச் சிரிப்பதற்கான காமெடியோ, உருக வைக்கும் ‘ரொமான்ஸ்’ போர்ஷனோ, கதறி அழ வைக்கும் ‘ட்ராமா’வோ இதில் இல்லை. ‘இந்த கதையில் வருகிற பிரச்சனைக்குத் தீர்வு என்ன’ என்பதை நோக்கியே மொத்தப் படமும் நகர்கிறது.

அதற்கேற்ற வகையில் ஒரு பாத்திரமாகவே நாயகன் நாயகி முதல் சரவணன், மதன் தட்சிணாமூர்த்தி, சம்பத்ராஜ், தீபக் பரம்போல், ஹகீம் ஷாஜகான், ஹன்னா ரெஜி கோஷி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு பாத்திரமும் சில உண்மைகளை மனதில் மறைத்து வைத்துக்கொண்டு வெளியில் இன்னொரு முகம் காண்பிப்பது தான் ’மிராஜ்’ கதையின் சிறப்பு. அதற்கேற்றவாறு, ‘மிராஜ்’ எனும் டைட்டில் உடன் ‘கானல் நீர் என்பது அருகில் சென்று பார்த்தால் மறைந்து போகும்’ என்ற விளக்கத்தையும் தந்திருக்கிறார் ஜீத்து ஜோசப். கடைசி நொடி வரை அதனை இப்படம் சொல்லியிருப்பது அபாரம்.
தொடக்கம் முதல் இறுதி வரை நகம் கடிக்கிற வகையில் ஒரு ‘த்ரில்’ திரையனுபவம் வேண்டும் என்பவர்கள் மட்டும் தாராளமாக ‘மிராஜ்’ பார்க்கலாம்.. கொண்டாடலாம்..!