“டாக்டர் கனவு ஒரு பக்கம் இருக்கட்டும்… இன்ஜினியரிங்ல ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ (CSE) சீட் கிடைச்சா லைஃப் செட்டில் டா!” என்று நினைக்கும் மாணவர்களா நீங்கள்? ஜெஇஇ மெயின்ஸ் (JEE Main) முதல் கட்டத் தேர்வு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், “எந்த ரேங்க் எடுத்தா எந்த காலேஜ்ல சீட் கிடைக்கும்?” என்ற கணக்கு வழக்குகள் இப்போதே தொடங்கிவிட்டன.
குறிப்பாக, ஐஐடி, என்ஐடி (NIT) மற்றும் ஐஐஐடி (IIIT) போன்ற பிரீமியம் கல்லூரிகளில் கணினி அறிவியல் பிரிவில் சேருவது என்பது குதிரைக் கொம்பு. கடந்த காலப் புள்ளிவிவரங்களை வைத்து, 2026-ல் எதிர்பார்க்கப்படும் ‘சேஃப் ரேங்க்’ (Safe Rank) நிலவரம் இதோ!
ஐஐடி மும்பை தான் ‘டாப்’: இந்தியாவிலேயே இன்ஜினியரிங் மாணவர்களின் முதல் சாய்ஸ் ‘ஐஐடி மும்பை’ தான். இங்கு சிஎஸ்இ (CSE) சீட் கிடைக்க, ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் பொதுப் பிரிவினர் முதல் 68 ரேங்க்குக்குள் வர வேண்டும். (தலை சுத்துதா பாஸ்?).
- டெல்லி ஐஐடி என்றால் டாப் 115 ரேங்க்.
- நம்ம ஊர் சென்னை ஐஐடி-யில் சேர வேண்டும் என்றால், டாப் 150-க்குள் இடம் பிடித்தாக வேண்டும்.
திருச்சி என்ஐடி நிலைமை என்ன? ஐஐடிக்கு அட்வான்ஸ்டு தேர்வு என்றால், என்ஐடி-க்கு ‘ஜெஇஇ மெயின்ஸ்’ மதிப்பெண் போதும். தேசிய அளவில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் திருச்சி என்ஐடி-யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் கிடைக்க, அகில இந்திய அளவில் முதல் 1,500 ரேங்க்குக்குள் (General Category) வருபவர்களுக்கே முன்னுரிமை. மற்ற மாநில ஒதுக்கீடு (Home State Quota) என்றால் கொஞ்சம் தளர்வு இருக்கலாம். வாரங்கல் மற்றும் சுரத்கல் என்ஐடி-களிலும் ஏறக்குறைய 2,000 ரேங்க்குக்குள் இருந்தால் மட்டுமே சிஎஸ்இ கனவு பலிக்கும்.
அப்ப மத்தவங்களுக்குச் சீட் இல்லையா? பயப்பட வேண்டாம்! பழைய ஐஐடி, என்ஐடி-களைத் தாண்டி, புதிதாகத் தொடங்கப்பட்ட ஐஐடி (திருப்பதி, பாலக்காடு போன்றவை) மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள என்ஐடி-களில், 5,000 முதல் 15,000 ரேங்க் வரை எடுத்தால் கூடப் பொதுப் பிரிவினருக்குச் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐஐஐடி (IIIT) கல்லூரிகளில் 25,000 ரேங்க் வரைக்கும் கூட வாய்ப்புகள் நீள்கின்றன.
மாணவர்களே… ‘கம்ப்யூட்டர் சயின்ஸ் கிடைச்சா மட்டும்தான் படிப்பேன்’னு ஒற்றைக் காலில் நிற்காதீங்க. இப்போ இருக்கிற டெக்னாலஜி வளர்சியில, ECE (எலக்ட்ரானிக்ஸ்), AI & Data Science போன்ற படிப்புகளுக்கும் ஐடி கம்பெனிகள்ல ரத்தினக் கம்பளம் விரிக்கிறாங்க. முக்கியமா, செஷன்-1 தேர்வு ஒருவேளை சுமாராகப் பண்ணியிருந்தா சோர்ந்து போகாதீங்க. ஏப்ரல் மாசம் நடக்கப்போற செஷன்-2 இருக்கு. அதுல ‘வெறித்தனமா’ படிச்சு பர்சன்டைலை (Percentile) ஏத்துங்க. ஆல் தி பெஸ்ட்!
