1999-ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது என்பது ஜெயலலிதாவின் வரலாற்று புரட்சி; வரலாற்றுப் பிழை அல்ல என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
1999-ல் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழை என அக்கட்சியின் மூத்த தலைவர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார். இது தொடர்பாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
கடம்பூர் ராஜூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: எம்ஜிஆர் தோற்றுவித்த மக்கள் இயக்கத்தை எம்ஜிஆர் மறைவுக்குப் பின் 4 முறை, 20 ஆண்டுகாலம் ஆட்சியில் அமர்த்தியவர் ஜெயலலிதா. அதிமுகவை நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவாக்கியவர் ஜெயலலிதா.

234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா.
இப்படி அதிமுகவை உச்சநிலைக்குக் கொண்டு சென்ற ஜெயலலிதாவை, “பாஜக கூட்டணி முறிவு” என்ற வரலாற்று பிழையை செய்துவிட்டார் என ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட கடம்பூர் ராஜூ கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

1999-ம் ஆண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி, பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால்தான் 2001-ம் ஆண்டு அதிமுக தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா 2-வது முறையாக முதல்வரானார். இந்த வரலாறு தெரியாமல் கடம்பூர் ராஜூ பேசியிருப்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது.
ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி. அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர வழிவகுத்தது. ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ, அமைச்சராக்கப்பட்ட கடம்பூர் ராஜூ பேச்சுதான் வரலாற்று பிழை.
“மோடியா, இந்த லேடியா” பார்த்துவிடலாம் என சவால்விட்டு 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற காரணமாக இருந்த ஜெயலலிதாவை கடம்பூர் ராஜூ குறை சொல்வது, வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. ஜெயலலிதாவை குறை சொல்வது உண்டவீட்டுக்கு ரெண்டகம் செய்வது. ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது மிகப் பெரிய துரோகம். ஆகையால் கடம்பூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை எனில் இதற்கு தக்க பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அறிக்கையின் பின்னணி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்படுவதாக கூறி வரும் ஓபிஎஸ், அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்த போது அவரை சந்திக்க நேரம் ஒதுக்கி தர கடிதம் எழுதியிருந்தார். ஆனால் ஓபிஎஸ்-க்கு அனுமதி தரப்படவில்லை. இதனால் தமிழகத்துக்கான கல்வி நிதி விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார் ஓபிஎஸ். தற்போது கடம்ம்பூர் ராஜூவின் பேச்சை முன்வைத்தும் பாஜகவை மீண்டும் தாக்கி இருக்கிறார் ஓபிஎஸ்.