சொத்துவரி பாக்கியை கட்ட தவறினால் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீடு ஏலத்திற்கு கொண்டுவரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரிபாக்கியை வசூலிக்கும் வகையில் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட ஜெ. தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் வருமான வரி பாக்கியை பொறுத்தவரை முதலில் 36 கோடி ரூபாய் என்று வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு 13 கோடி ரூபாய் என்று ஒரு நோட்டீஸ் வந்தது. சரியான தொகையை தெரிவித்தால் அந்த தொகையை நாங்கள் செலுத்த தயாராக இருக்கிறோம் என்று தீபா சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த ஜனவரி 21ஆம் தேதி நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்த போது, வருமானவரித் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி சரவணன் வருமானவரி பாக்கி குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது, வருமானவரித் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.பி.ஸ்ரீனிவாஸ் ஆஜரானார்.
அவர் வாதாடுகையில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991-92 முதல் 2006-07 வரையிலான பல்வேறு மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு வருமான வரி நிலுவைத் தொகையையும், 1992-93 முதல் 2015-16 வரையிலான ஆண்டுகளுக்கான சொத்து வரி நிலுவை தொகையையும் செலுத்த வேண்டி இருந்தது.
இந்த நிலுவைத் தொகையை அதற்குரிய வட்டியுடன் சேர்த்து வசூலிக்க வருமானவரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.
வருமானவரித்துறை ஆகஸ்ட் 4 2025 அன்று அனுப்பிய அறிவிப்பை எதிர்த்து தீபா உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்த போதிலும், தீபக் ஆகஸ்ட் 11 2025 அன்று வருமானவரித்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில் வரி நிலுவைத் தொகையில் தனது பங்கான 6.75 கோடியை செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்டிருந்தார்.
அதோடு அக்டோபர் 14 அன்று மற்றொரு கடிதத்தை எழுதி, நிலுவையில் உள்ள தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு அனுமதி வேண்டும் என்று கோரினார். அவரது கோரிக்கையை ஏற்று 6.75 கோடி ரூபாயை அக்டோபர் 25 முதல் மார்ச் 26 வரையிலான காலப்பகுதியில் ஆறு சமமான மாத தவணைகளாக செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
அக்டோபர் 15 2025 மற்றும் நவம்பர் 15 2025 ஆகிய தேதிகளில் 1.12 கோடியை செலுத்தினார். அந்தத் தொகையில் 62.50 லட்சத்தை ஜெயலலிதாவின் பான் எண்ணிற்கு பதிலாக அவருடைய சொந்த பான் எண்ணை குறிப்பிட்டு செலுத்தியுள்ளார். பலமுறை நினைவூட்டியும் அவர் அந்த சலான் விவரங்களை திருத்தவில்லை’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து வாதங்களை முன்வைத்த வருமானவரித் துறை வழக்கறிஞர், ‘ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் வருமான வரி மற்றும் சொத்துவரி பாக்கி 13.69 கோடியை கட்ட தவறினால் போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு ஏலத்திற்கு கொண்டுவரப்படும் என்றும் கூறினார்.
அதாவது ஜெயலலிதாவின் சொத்துக்களில் உரிமை உள்ள நபர்கள் வரி நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் வருமானவரிச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின் படி அந்த சொத்தை ஏலத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை வருமானவரித் துறை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
இந்த வாதத்தை தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
