விஜய் தவெகவின் தலைவராக இருக்க அருகதை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக தெரிவத்துள்ளார
நடிகரும் தமிழக வெற்றிக் கழகதலைவருமான விஜய் நேற்று அக்கட்சியின் 3ம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொண்டார். அப்போது நடந்த கலைநிகழ்ச்சியின் போது விஜய் டான்ஸ் ஆடியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிமுகவின் பெயரை சொல்லாமல் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி என்று பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து அதிமுகவினர் விஜய்யின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி3) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “விஜய் தனது சம்பளம் எவ்வளவு என தெளிவு படுத்த வேண்டும். விஜய் வாங்குவது வெள்ளையா? கருப்பா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு, வருமான வரி எவ்வளவு செலுத்தி இருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நான் அதற்குள் போக விரும்பவில்லை.
கருப்பு, வெள்ளை என வாங்குவது எல்லாம் சமூகத்திற்கு கேடு இல்லையா? உண்மையிலேயே கை சுத்தம், ஊழலுக்கு அப்பாற்பட்டு “நான் இவ்வளவு தான் சம்பளம் வாங்கினேன், இவ்வளவு வரி கட்டி இருக்கிறேன்” என்று சொல்ல முடியுமா?
விஜயால் சொல்ல முடியாது. கருப்பு அதிகம், வெள்ளை குறைவு. அப்படி என்றால் வரியும் குறைவு. அதனால் யார் யாரை விமர்சனம் செய்வது என்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டும்.
தவெக கட்சி யாருடைய பணத்தில் நடக்கிறது? லாட்டரி பணத்தில் இருந்து தான் நடக்கிறது. கரூரில் 41 உயிர்கள் பறிபோனது . அரசு தரப்பு, விஜய் தரப்பு என இரு தரப்பு மீதும் மனம் வருந்தி நான் குற்றம் சொன்னேன். ஆனால் கொஞ்சம் கூட ஒரு குற்ற உணர்வு இல்லாமல் மூன்றாவது ஆண்டு கட்சி தொடக்க விழாவில் வந்து டான்ஸ் ஆடுகிறார் என்றால், அந்த 41 குடும்பங்கள் எந்த அளவிற்கு மனக்கஷ்டப்படும் என்று தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத விஜய்க்கு தவெகவின் தலைவராக இருக்கக்கூடிய அருகதை இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
