ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் மீது நடத்தப்படும் வன்மம் பொதிந்த விமர்சனத் தாக்குதல்களுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிபிசி தொலைக்காட்சியில் ஏ.ஆர்.ரகுமான் வழங்கிய நேர்காணலில் திரைத்துறையில் வெறுப்பு அரசியல் எவ்வாறு மிகைத்து இருக்கிறது என்றும் ஹிந்தி திரைத்துறையில் தான் புறக்கணிக்கப்பட்டதையும் கூறியிருந்தார்.
இந்த நேர்காணலுக்கு எதிராக அருணாப் கோஸ்சாமி, கங்கணா ரணாவத், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி போன்றவை அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆஸ்கார் விருது, இந்திய அளவில் புகழ்மிக்க பத்ம விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்று இசைத்துறையில் கண்ணியமான இடத்தைத் தக்க வைத்திருக்கும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் மீது வன்மத்தோடு கருத்துக்கள் பரப்பப்படுவது கடும் கண்டனத்துக்குரியது.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனாலேயே அவர் குறி வைக்கப்படுகிறார். சிறந்த தமிழனாகவும் சிறந்த இந்தியனாகவும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும்ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவாகத் தமிழ் திரை உலகத்தினர் குரல் எழுப்பாதது வேதனை அளிக்கின்றது.
ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் இந்தியச் சமூகமும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான வெறுப்பு அரசியலை கண்டித்து குரல் கொடுக்க வேண்டும்.” என அதில் கூறப்பட்டுள்ளது.
