“நிலாச்சோறு” சாப்பிட்டது அந்தக் காலம். இனி “நிலா கரண்ட்” பயன்படுத்தப்போகும் காலம் வரப்போகிறது! பூமியில் நிலக்கரி தீர்ந்துபோகும், பெட்ரோல் விலை ஏறும், காற்றாலை நிற்கலாம். ஆனால், சூரியன் மறையாத இடத்திலிருந்து மின்சாரம் எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு பிரம்மாண்டமான திட்டத்தைத்தான் ஜப்பான் கையில் எடுத்துள்ளது.
உலகம் முழுவதும் எரிசக்தித் தட்டுப்பாடு (Energy Crisis) தலைவிரித்தாடும் நிலையில், அதற்கொரு நிரந்தர தீர்வாக ஜப்பான் முன்வைக்கும் திட்டம் தான் “லூனா ரிங்” (Luna Ring).
திட்டம் என்ன? நிலவின் மத்திய ரேகையைச் (Equator) சுற்றி, சுமார் 11,000 கிலோமீட்டர் நீளத்திற்குச் சோலார் பேனல்களை (Solar Panels) அமைப்பதுதான் இந்தத் திட்டம். நிலவைச் சுற்றி ஒரு பெல்ட் அணிவித்தது போல இந்த சோலார் பேனல்கள் அமைந்திருக்கும்.
ஏன் நிலவு? பூமியில் சோலார் சக்தி எடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. மழை வரும், மேகமூட்டம் இருக்கும், முக்கியமாக இரவு நேரத்தில் மின்சாரம் தயாரிக்க முடியாது. ஆனால், நிலவில் வளிமண்டலம் (Atmosphere) கிடையாது. மேகங்களோ, மோசமான வானிலையோ சூரிய ஒளியைத் தடுக்காது. எனவே, அங்கு 24 மணி நேரமும், வருடம் முழுவதும் தடையற்ற மின்சாரம் தயாரிக்க முடியும்.
பூமிக்கு எப்படி வரும்? “நிலாவுல கரண்ட் தயாரிச்சாச்சு… அங்க இருந்து பூமிக்கு வயர் இழுக்க முடியுமா?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இங்குதான் தொழில்நுட்பம் விளையாடுகிறது. நிலவில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, மைக்ரோவேவ் (Microwave) அல்லது லேசர் (Laser) கதிர்களாக மாற்றி, பூமிக்கு ‘வயர்லெஸ்’ முறையில் அனுப்புவார்கள். பூமியில் உள்ள பெறும் நிலையங்கள் (Receiving Stations) அதை மின்சாரமாக மாற்றி விநியோகம் செய்யும்.
எதிர்காலப் பயன்: இந்தத் திட்டம் மட்டும் வெற்றியடைந்தால், பூமியின் எரிசக்தித் தட்டுப்பாடு என்ற பிரச்சனையே இருக்காது என்று கூறப்படுகிறது.
- சுத்தமான ஆற்றல் (Clean Energy): புகை கிடையாது, சுற்றுச்சூழல் மாசு கிடையாது.
- தீராத வளம்: சூரியன் இருக்கும் வரை நமக்கு மின்சாரம் கிடைத்துக்கொண்டே இருக்கும். பூமியின் எனர்ஜி பிரச்சனையை இது நிரந்தரமாகத் தீர்த்துவிடும்.
ஜப்பானின் ஷிமிசு (Shimizu) கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. இது கேட்பதற்கு அறிவியல் புனைக்கதை (Sci-fi) படம் போல இருந்தாலும், வருங்காலத்தில் இது நிஜமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மின்சாரத்திற்காக இனி நாம் வானத்தைப் பார்க்க வேண்டியதில்லை; நிலவைப் பார்த்தால் போதும்!
