நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கல் குறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வர உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி இன்று (ஜனவரி 13) தனது எக்ஸ் பதிவில், “தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தடை செய்யும் முயற்சி, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான தாக்குதலாகும்.
திரு மோடி, தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டீர்கள்.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு பிரிவினர் தொடர்ச்சியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வெளிப்படையான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், இன்று விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது தமிழக அரசியலில் உற்றுநோக்கப்படும் வகையில் அமைந்துள்ளது.
