ஜேம்ஸ் கேமரூன் – ராஜ மவுலி ; என்ன பேசினார்கள்?

Published On:

| By Minnambalam Desk

பெயர் சொன்னால் போதும்; தரம் எளிதில் விளங்கும் வரிசையில் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனைச் சொல்லலாம்.

‘என்ன இருந்தாலும் அவரு கிறிஸ்டோபர் நோலன் அளவுக்கு கிடையாது’ என்று சில அறிவு ஜீவிகள் சொன்னாலும் மாஸ் அண்ட் கிளாஸ் இரண்டின் கலவை என்றால் அது ஜேம்ஸ் கேமரூன்தான்.(நோலன் படங்களைப் புரிந்து கொள்ள சில சமயம் ஒரு ஆராய்ச்சியாளராக இருப்பது அவசியம்.)

ADVERTISEMENT

1982 ஆம் ஆண்டு வெளிவந்த Piranha II: The Spawning என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஜேம்ஸ் கேமரூன், டெர்மினேட்டர் இரண்டு பாகங்கள், ஏலியன்ஸ், அப்பிஸ், ட்ரூ லைஸ், டைட்டானிக், அவதார் மூன்று பாகங்கள்… இதுதான் அவரது பட வரிசை. நாற்பத்தி மூன்று வருடத்தில் பத்தே படங்கள்.. ஒரு படம் கூட பெரிய அளவில் சோடை போனது இல்லை.

ஜேம்ஸ் கேமரூனோடு, மணிரத்னமோ ஷங்கரோ ஏதாவது ஒரு படத்துக்கு இணைவார்கள் என்றெல்லாம் நம்பப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால் தமிழ் வரலாற்று நாவல்களை எல்லாம் சுட்டு தெலுங்கில் படம் எடுத்தாலும், ராஜ மவுலி ஜேம்ஸ் கேமரூனை ‘டச்’ பண்ணி விட்டார். (இவர் 24 வருடத்தில் 12 படங்கள் எடுத்துள்ளார்.)

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை 20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடுகிறது.

ADVERTISEMENT

இந்தப் படம் ரிலீசுக்கு முன்பே ராஜமவுலிக்குப் போட்டுக் காட்டப்பட்டது.

படம் முடித்ததும் ஜேம்ஸ் கேமரூன், எஸ்.எஸ். ராஜமெளலி இருவரும் வீடியோ அழைப்பில் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படம் பற்றிக் கலந்துரையாடினர்.

கதைசொல்லலின் நுணுக்கங்கள், தனிப்பட்ட படைப்பாற்றல் திறன் மற்றும் பட வெளியீட்டின் போது ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து இரண்டு இயக்குநர்களும் வெளிப்படையாக உரையாடினர்.

காட்சிகளின் பிரம்மாண்டத்தை இன்னும் விரிவாக்கி உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை பார்த்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டபோது, ” திரையரங்கில் ந ன் ஒரு குழந்தையைப் போல குதூகலித்தேன்” என்றார் ராஜமெளலி.

”ஹைதராபாத்தில் உள்ள ஐமாக்ஸில் ’அவதார்’ முதல் பாகம் திரைப்படம் ஒரு வருடம் ஓடியது. அப்போது அந்தப் படத்தை பார்த்து நான் வியந்து போய் நின்றேன். இன்னும் மறக்க முடியாத அனுபவம் அது” என்று தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட ராஜமௌலி, ‘பெரிய திரை அனுபவங்களுக்கு ’அவதார்’ திரைப்படம் ஒரு மைல்கல்’ என்றும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை பாராட்டினார்.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் ராஜமௌலியின் சினிமா பார்வையைப் பாராட்டியதோடு ” உங்கள் படங்களின் வசனங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்கள் இயக்கும் வாரணாசி படத்தின் படப்பிடிப்புக்கு நான் வருகிறேன். உங்களுக்கு ஓகே என்றால் சில காட்சிகளை நான் படமெடுத்துக் கொடுக்கிறேன்” என்று கூறினார். நெகிழ்ந்து போன ராஜ மவுலி. ”அவசியம் வாருங்கள்…” என்றார்.

இந்த விசயம் இந்திய சினிமா அளவில் பெரிய வியப்பை ஏற்படுத்தி இருக்கும் அதே வேளையில் இந்திய சினிமா மார்க்கெட்டுக்கு இதனால் பலன்கள் அதிகம் கிடைக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

தமிழ் சினிமா தயாரிப்பளர்களும் படைப்பாளிகளும் கலைஞர்களும், எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share