தமிழகத்தின் கரூரில் நடிகர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
சிபிஐ நடத்தும் விசாரணையை உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான 3 பேர் குழு கண்காணிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுவின் தலைவர் அஜய் ரஸ்தோகி பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர்.
யார் இந்த அஜய் ரஸ்தோகி?
- ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜஸ் ரஸ்தோகி.
- ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக 2004-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றியவர்
- 2018-ல் திரிபுரா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்
- 2018 முதல் 2023-ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்
- உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய போது, தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவின் கம்பளா போட்டிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர்.
- முத்தலாக் வழங்குவது குற்றம் என தீர்ப்பளித்த வழக்கின் பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவர்.
- தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுதான் நியமிக்க வேண்டும் என்கிற தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர்.
- பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு குஜராத் அரசு கருணை காட்டுவது குறித்து பரிசீலனை செய்யலாம் என உத்தரவிட்ட நீதிபதிகளில் ஒருவர். இந்த உத்தரவின் அடிப்படையில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் 11 குற்றவாளிகளின் விடுதலை உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.