குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றன. குறிப்பாக பாஜகவின் அழுத்தம் இருப்பதாக கூறி வருகின்றன. Jagadeep Dhankar resignation
2022ஆம் ஆண்டு குடியரசுத் துணை தலைவராக பொறுப்பேற்றவர் ஜெகதீப் தன்கர். 2027 வரை இவரது பதவி காலம் உள்ளது. தற்போது இவருக்கு வயது 74. இந்த நிலையில் உடல்நிலையை காரணம் கூறி திடீரென நேற்று தனது பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஏற்றுக்கொண்டார். உடல்நலத்தை கவனித்துக்கொள்ளுமாறு பிரதமர் மோடியும் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்தசூழலில் ஜெகதீப் தன்கரின் இந்த திடீர் முடிவுக்கு பாஜக அழுத்தம் தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையை மாலை 4.36 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் ஜெகதீப் தன்கர்.
நட்டா மறுப்பு
ஒத்திவைப்பதற்கு முன்னதாக, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்க கோரி 50 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டு வழங்கிய நோட்டீஸை பெற்றார் ஜெகதீப் தன்கர். ராஜ்யசபா செயலாளரிடம் இந்த நோட்டீஸ் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.
இந்தசூழலில் நேற்று தன்கர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் நட்டா, கிரண் ரிஜூஜூ ஆகிய முக்கிய அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் குறிப்பிட்டு நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 4.30 வரை ஏதோ நடந்திருக்கிறது. அது ஜெகதீப் தன்கரை அப்செட் ஆக்கியுள்ளது என்கின்றன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.
அதோடு அவையில் நான் சொல்வது மட்டுமே பதிவு செய்யப்படும் என்று மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது நட்டா கூறியதாகவும், அது தன்கரை அவமதிக்கும் வகையில் இருந்ததாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் இந்த கூற்றை நட்டா நிராகரித்துள்ளார்.
மாலை 4.30 மணிக்கு ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்த அலுவல் கூட்டத்துக்கு நாங்கள் செல்லாததற்கு காரணம், மற்றொரு முக்கியமான நாடாளுமன்ற நடவடிக்கைகளில் மும்முரமாக செயல்பட்டிருந்தோம் என்று பாஜக மூத்த தலைவர் நட்டா கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தில் நான் பேசியது எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பதிலளிக்கத்தான்…ஜெகதீப் தன்கரை அவமதிமக்கும் வகையில் அல்ல என்றும் நட்டா விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூலை 10ஆம் தேதி டெல்லி ஜேஎன்யு பல்கலைக் கழத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெகதீப் தன்கர், நான் 2027ல் சரியான நேரத்தில் ஓய்வு பெறுவேன். எனினும் இது தெய்வீக தலையீட்டுக்கு உட்பட்டது. நான் “ஒரு விவசாயியின் மகன்”, “ஒருபோதும் அழுத்தத்தின் கீழ் வேலை செய்யமாட்டேன்” என்று கூறியிருந்தார். இந்த வீடியோவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எது எப்படி இருந்தாலும் இந்த ராஜினாமாவுக்கு காரணம் என்னவென்று ஜெகதீப் தன்கருக்கும், அரசாங்கத்துக்கும் மட்டுமே தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
என்.டி.ஏ-வுக்கு சாதகம்…
ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை தொடர்ந்து அடுத்த துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான சாதகம் என்.டி.ஏ.-வுக்கே உள்ளது.
543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஒரு சீட் காலியாக உள்ளது. 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் ஐந்து இடங்கள் காலியாக உள்ளன.
இரு அவைகளின் ஒருங்கிணைந்த பலம் 786 ஆகும். எனவே துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் 394 வாக்குகளைப் பெற வேண்டும்.
மக்களவையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அதேசமயம் மாநிலங்களவையில் 129 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆக, 786 பேரில் 422 உறுப்பினர்களின் ஆதரவு பாஜக கூட்டணிக்கு உள்ளது.
இப்படி துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் நிலையில் தான், பிகார் தேர்தலை கருத்தில் கொண்டு அந்த மாநில பிரதிநிதியை நாட்டின் முக்கிய பதவிக்கு பாஜக கொண்டு வரலாம் என தகவல்கள் வருகின்றன.
அதாவது, பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியில் இருந்து ஹரிவன்ஷ் நாராயண் சிங் மாநிலங்களவை எம்.பி ஆனார். கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் என்டிஏ கூட்டணியின் வேட்பாளராக மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அடுத்த குடியரசுத் தலைவர் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். Jagadeep Dhankar resignation