ADVERTISEMENT

கரூர் துயரம்… ஒருவரை மட்டுமே குற்றம் சொல்வது சரியில்லை : நடிகர் இளவரசு ஆதங்கம்!

Published On:

| By christopher

It is not right to blame only one person for karur stampede - Ilavarasu

கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு ஒருவரை மட்டுமே குற்றம் சொல்வது சரியில்லை. அதில் அனைவர் மீதும் தவறு உள்ளது என நடிகர் இளவரசு தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இன்று சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் இளவரசு. சமீபத்தில் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த ‘ராமராஜன்’ கதாப்பாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் பிலிமிபீட் யூடியூப் சேனலுக்கு இளவரசு அளித்த பேட்டியில் கரூர் துயர சம்பவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “கரூர் சம்பவம் குறித்து ஒரு ஆட்டோ டிரைவர் பேசியிருந்தார். அதை நான் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். என்னுடைய கருத்து அதுதான்.

ADVERTISEMENT

அந்த வீடியோவில் அவர், ’பகுத்தறிந்து, எது தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். சுயமாக யோசிக்க வேண்டும். யாருடைய வழிகாட்டுதலும் உங்களை சரி செய்யும் என்று நம்பாதீங்க’ என சொல்லியிருந்தார். அவர் பாமரன் என நான் கருதவில்லை. அவர் பக்குவமானவர் என நான் கருதுகிறேன். அது தான் என்னுடைய கருத்து.

இந்த சமூக ஊடகங்கள் ஆதிக்கம் பெற்றுள்ள இந்த காலத்தில், ஏதாவது ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்றால் அதைபற்றி தான் அடுத்த 20 நாட்களுக்கு பேசுகிறார்கள். அதை சுற்றி மிகப்பெரிய வியாபாரம் நடக்கிறது. கரூரில் உயிரிழந்த 41 பேர் திரும்ப வரப்போகிறார்களா? இனிமேல் ஒரு உசுரு கூட அப்படி போகக் கூடாது என்பதில் அனைவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். ஒருவரை மட்டுமே குற்றம் சொல்வது சரியில்லை. அது அநாகரீகத்தின் உச்சம். இந்த விஷயத்தில் அனைவர் மீதும் தவறு உள்ளது.

ADVERTISEMENT

21ஆம் நூற்றாண்டிலும் இப்படி போய் சாவதை ஒரு மனிதனாக எளிதில் கடந்து போக முடியாது. இத்தனைக்கும் மேல் இனி ஒரு உயிர்கூட கூட்டநெரிசலில் பலியாக கூடாது.

கும்பகோணத்தில் தீ பிடித்து 91 குழந்தைகள் பலியானார்கள். நான் அப்போது கிரி பட ஷூட்டிங்கில் இருந்தேன். அந்த 10 நாட்களுக்கு பிறகு எல்லா பள்ளிகளும் சரியாகிவிட்டதா? தீப்பிடிக்காமல் செய்து விட்டோமா? ஒரு சம்பவத்தை வைத்து செய்தி ஊடகங்கள் பெரிய வருமானம் சம்பாதிக்கிறார்கள். அதில் வருமானம் இல்லையென்றால் அடுத்த சம்பவத்துக்கு மாறிவிடுவார்கள். கரூர் சம்பவத்தில் விஜய் இருப்பதாலே அதை சுற்றி ஒரு வியாபாரம் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒரு நடிகனாக அதைத் தாண்டி பேச விரும்பவில்லை. அவ்வளவு தான் என்னுடைய அரசியல். நான் உங்களை தொந்தரவு பண்ணாமல் இருக்கிறது தான் என் சுய அறம். அதுதான் அரசியல்” என இளவரசு பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share