இஸ்ரேல் தாக்குதல்.. ஈரான் அமைச்சர், 81 பள்ளி குழந்தைகள் பலி- விமான சேவைகள் கடும் பாதிப்பு!

Published On:

| By Mathi

Iran Israel US

ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலால் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது; இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானில் பள்ளிக் கூடம் ஒன்றில் 85 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரான் தலைநகர் தெஹ்ரானை விட்டு பொதுமக்கள் அனைவரும் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் தெஹ்ரானில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

ஈரானில் உள்ள இந்தியர்கள், வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

விமான சேவைகள் பாதிப்பு

ADVERTISEMENT

ஈரான் மற்றும் வளைகுடா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தொடர் தாக்குதல்களின் காரணமாக மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டமான சூழல், இந்திய விமான சேவைகளை, குறிப்பாக தமிழகத்திற்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே அதிகரித்துவரும் இந்த பதட்டங்கள், சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இஸ்ரேல்- அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், ஈராக், குவைத், பஹ்ரைன், ஜோர்டான், லெபனான், சவுதி அரேபியா மற்றும் ஓமன் உள்ளிட்ட பல முக்கிய நாடுகளின் வான்பரப்பு மூடப்பட்டுள்ளது. இதனால், இந்திய விமானங்கள் ஏற்கனவே ஈரானிய வான்பரப்பைத் தவிர்த்து வந்த நிலையில், தற்போது மேற்கு ஆசிய வான்பரப்பைப் பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன.

ADVERTISEMENT

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களுக்கும் இந்த வான்பரப்பு மிகவும் முக்கியமானது என்பதால், விமானங்கள் நீண்ட தூர மாற்று வழித்தடங்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இது பயண நேரத்தை அதிகரிப்பதுடன், கூடுதல் எரிபொருள் நிரப்பும் நிறுத்தங்களுக்கும் வழிவகுக்கிறது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, தோஹா, பஹ்ரைன் மற்றும் மஸ்கட் போன்ற வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் மாணவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பின்னணி என்ன?

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான பகை இன்று நேற்றல்ல. 1979 ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, இஸ்ரேலை “சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்” என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்தது. பாலஸ்தீனியக் குழுக்களான ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற ஆயுத குழுக்களுக்கு ஈரான் நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருவது, இஸ்ரேலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் சீர்குலைத்தது.

அத்துடன் அணு ஆயுத விவகாரமும் மிக முக்கியமானது. அமைதி நோக்கங்களுக்காக மட்டுமே அணுசக்தித் திட்டம் என ஈரான் கூறினாலும், அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் குற்றம் சாட்டுகின்றன. 1953 இல் அமெரிக்காவின் “அமைதிக்கான அணுசக்தி” திட்டத்தின் கீழ் தொடங்கிய ஈரானின் அணுசக்திப் பயணம், இன்று உலகளாவிய பதற்றத்தின் மையப்புள்ளியாக உள்ளது.

2024 முதல் தற்போது வரை சிரியா மற்றும் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நேரடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல்- ஈரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ஏவுகணை மையங்கள் மீது சரமாரியான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் நாடன்ஸ் அணுசக்தி செறிவூட்டல் தளம் உட்பட முக்கிய அணு ஆயுத தளம் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஈரானின் அதிமுக்கிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே உட்பட பல விஞ்ஞானிகளை இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் படுகொலை செய்துள்ளது.

இந்த பின்னணியில் ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்காவும் இணைந்துள்ளது. ”ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் இராணுவத் தொழில்களை முடக்குவதை நோக்கமாகக் கொண்டு போர் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share