“ஈஷா புனிதமான பணியை செய்கிறது” : தகன மேடை வழக்கில் உச்ச நீதிமன்றம் பாராட்டு!

Published On:

| By Kavi

ஈஷா தகன மேடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,  “அந்த அறக்கட்டளை புனிதமான பணியை செய்கிறது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் ஈஷா அறக்கட்டளை சார்பில் காலபைரவர் எரிவாயு தகன மண்டபம் கட்ட, கிராம பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உதவி இயக்குனர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் ஒப்புதல் அளித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அதே பகுதியைச் சேர்ந்த  சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

ADVERTISEMENT

இந்த வழக்கை கடந்த ஜனவரி 21ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ”தமிழ்நாடு கிராம பஞ்சாயத்துகள் கல்லறை மற்றும் சுடுகாடு விதிகளின்படி குடியிருப்பு அல்லது குடிநீர் வினியோக ஆதாரத்திலிருந்து 90 மீட்டர் தொலைவில் மயானம் அமைக்க உரிமம் வழங்குவதை தடை செய்யவில்லை. கிராம பஞ்சாயத்திடம் உரிமம் பெறுவது மட்டுமே முன் நிபந்தனை என்று விதிகள் உள்ளன” என்று கூறி ஈஷாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (பிப்ரவரி 26) விசாரித்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உள்ளூர் விதிமுறைகளின்படி, கிராம ஊராட்சியின் உரிய உரிமம் இன்றி, நீர்நிலைகள் அல்லது குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் சுடுகாடு அல்லது மயானம் அமைக்கப்படக் கூடாது. இந்த தகனமேடை அமைந்துள்ள பகுதியிலிருந்து 10 மீட்ட தொலைவில் ஒரு வீடு இருக்கிறது. இது மிகப்பெரிய தொந்தரவை ஏற்படுத்துகிறது. கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு நாளும் அங்கு பிணங்கள் எரிக்கப்படுகின்றன” என்று வாதிட்டார்.

ADVERTISEMENT

மேலும் அவர்,  “மனுதாரரின் வீடு அமைந்துள்ள அந்தப் பகுதி ஒரு பழங்குடியினப் பகுதி. அங்கு வழக்கமாக உடல்களை எரிக்கும் வழக்கம் இல்லை, மாறாக உடல்களைப் புதைக்கும் பழக்கமே  நடைமுறையில் உள்ளது.  தற்போது அந்த தகன மேடைக்கு இறுதிச் சடங்கிற்காகக் கொண்டு வரப்படும் உடல்கள் அனைத்தும், அங்கிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோயம்புத்தூர் மாநகரப் பகுதியிலிருந்து கொண்டு வரப்படுகின்றன” என்றார். 

இதை கேட்ட தலைமை நீதிபதி,  “ஈஷா அறக்கட்டளையின் இத்தகைய சமூகப் பணிகளால், உயிரிழந்தவர்களின் உடல்கள் கவனிக்கப்படாமல் கைவிடப்படும் நிலை தவிர்க்கப்படுகிறது. இதையும் கவனிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். 

ஈஷா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,  “மனுதாரர் தனது நிலத்தின் ஒரு பகுதியை அறக்கட்டளைக்கே விற்றுவிட்டு, இப்படியொரு மனுவை தாக்கல் செய்துள்ளார்” என்று தெரிவித்தார். 

இதற்கு மனுதாரர் சார்பில்,  “நிலம் விற்கப்பட்டது உண்மைதான் . ஆனால், அந்த நிலம் சுடுகாடு கட்டுவதற்காக விற்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதற்கு ஒரு மாற்று முடிவை எடுக்க வேண்டும்.  மனுதாரரின் தற்போதைய வீட்டிற்கு உரிய இழப்பீடு வழங்கி, அவரை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்கான சாத்தியகூறுகளை ஆராய வேண்டும் என்று கூறினர். 

மனுதாரருக்கு மாற்று நிலம் வழங்குவது தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஏற்பாட்டை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்த நீதிபதிகள்,  இதற்காக ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவு பிறப்பித்தனர். 

இந்த விசாரணையின் போது, நீங்கள் நிலத்தை விற்றுவிட்டீர்கள். அங்கு என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று  இனி நீங்கள் சொல்ல முடியாது என்று குறிப்பிட்டதுடன்,  உடல்களை அடக்கம் செய்வது என்பது தற்போது ஒரு செலவுமிக்க விஷயமாக மாறிவிட்டது. ஈஷா அறக்கட்டளை செய்வது ஒரு மதச் சேவை அல்ல.  அவர்கள் ஒரு புண்ணியமான பணியைச் செய்து வருகிறார்கள். அது ஒரு நல்ல பணி என்றும் நீதிபதிகள் பாராட்டினர். 

இந்த உத்தரவை தொடர்ந்து ஈஷா வெளியிட்ட அறிக்கையில்,  “ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள், அவர்களின் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயானத்தை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஈஷா அறக்கட்டளை பஞ்சாயத்து அனுமதியுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இதர அரசு துறைகளின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவீன எரிவாயு மயானத்தை அமைத்தது.

அனைத்து மக்களுக்கும் கண்ணியமான இறுதிச் சடங்குகள் மற்றும் எரியூட்டும் சேவைகளை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், ஈஷா அறக்கட்டளை 2010-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை இயக்கி பராமரித்து வருகிறது. தற்போது சென்னை பெசன்ட் நகர், கோவை, நெய்வேலி, வேலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் 30 மயானங்களை ஈஷா பராமரித்து வருகிறது.

இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குவதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது. இதை ஈஷா வணிக நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது. 

மேலும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசுடன் ஈஷா அறக்கட்டளை இணைந்து, குறிப்பாக ஈஷா சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன் எந்தவித நிதிச்சுமையுமின்றி மேற்கொள்ள உதவும் வகையில் ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை’ வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share