எழுபதுகள், எண்பதுகளில் இந்தி திரையுலகில் ‘செக்ஸ் சிம்பல்’ ஆக திகழ்ந்தவர் பர்வீன் பாபி. ஆப்கானிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட ராஜ பரம்பரையைச் சேர்ந்தது இவரது குடும்பம். தொடக்கத்தில் மாடலிங் வாய்ப்புகள், பிறகு சினிமா வாய்ப்புகள் என்று ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் அமிதாப் பச்சன் உடன் இணைந்து 8 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தீவார், அமர் அக்பர் ஆண்டனி ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
வில்லன் நடிகராக இருந்த டேனி டெசோங்கோபா, டிவி நடிகரான கபீர் பேடி, இயக்குனர் மகேஷ் பட் ஆகியோரோடு தனது வாழ்வைப் பகிர்ந்து கொண்டவர் பர்வீன் பாபி.

கவர்ச்சியின் உச்சமாகத் திரையில் தோன்றிய பர்வீன் மது அருந்துவது, திருமணம் செய்துகொள்ளாமல் ‘லிவ் இன்’னில் வாழ்வது போன்ற காட்சிகளில் துணிந்து நடித்ததால் புகழ் பெற்றார். அவர் ஏற்ற பாத்திரங்கள் பிற நாயகிகள் நடிக்கத் தயங்கும் அளவுக்கு இருந்ததே அதற்குக் காரணம்.
அப்படிப்பட்ட பர்வீன் திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போதே மன நிம்மதியைத் தேடி ஆன்மிகச் சுற்றுலாக்களை மேற்கொண்டார். எண்பதுகளில் அவருக்கு ‘சீஸோப்ரெனியா’ எனும் மனநோய் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால், அது தனக்கு எதிராகச் சிலர் பரப்பும் வதந்தி என்று தொடர்ந்து பேட்டியளித்து வந்தார் பர்வீன் பாபி. ஒருமுறை அமிதாப்பச்சன் ஒரு மிகப்பெரிய கேங்க்ஸ்டர் என்றும், அவர் தன்னைக் கொல்லவும் உளவு பார்க்கவும் சிலரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்று வந்த பர்வீன் பாபி, தொண்ணூறுகளில் இந்தியா திரும்பினார். மும்பையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கினார். ஆனாலும், அவ்வப்போது அவர் தெரிவித்த கருத்துகள் பத்திரிகைகளில் சர்ச்சை செய்திகளாக வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில், 2005ஆம் ஆண்டு தனது 50வது வயதில் அவர் மரணமடைந்தார். அதுவும் அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்குப் பிறகே விஷயம் வெளியே தெரிய வந்தது.
இப்படிப் பல ஏற்றங்களையும் தாழ்வுகளையும் கொண்ட பர்வீன் பாபியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாவதாகக் கூறப்படுகிறது. ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூரின் காதலியாக வந்து அதகளம் செய்த ட்ரிப்தி திம்ரி இதில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நெட்பிளிக்ஸ் தயாரிக்க இருக்கிற இப்படத்தை சோனாலி போஸ் இயக்கவிருப்பதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் ‘பிங் வில்லா’ தளத்தில் தகவல் வெளியாகியிருக்கிறது.
படத்தின் உள்ளடக்கம் எப்படியிருந்தாலும், பர்வீன் பாபியின் தோற்றத்தில் ட்ரிப்தி நிச்சயம் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவார் என்று நம்பலாம்..!