ஸ்ரீராம் சர்மா
கன்னங்கருத்த நள்ளிரவுகளில் காதைக் கிழிக்கும் பேரிறைச்சலோடு பேயாய், பிணந்தின்னியாய் வந்து வந்து விழும் நாசகார குண்டுகள் !
நான் இருப்பேனோ, எந்த உறவு மிஞ்சுமோ என ஈரக்குலை நடுங்க திக்குத் தெரியாமல் அலறி ஓடும் மானுடங்கள் !
கட்டிடங்களை விட்டு கடற்கரையை நோக்கி திரள் திரளாய் ஓடும் அப்பாவி குடும்பங்கள் ! 24 மணி நேரத்தையாவது அமைதியாய் கடந்துவிட மாட்டோமா என ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள்!
இறந்த குழந்தையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்மார்களின் காய்ந்து போன விழிகள்! மடிந்த குழந்தையின் சடலத்தை இரு கரங்களில் சுமந்து கொண்டு தள்ளாடி நடக்கும் தகப்பன்மார்கள் !
ரத்தம்… ரத்தம்… அதுதான் இன்றைய பாலஸ்தீனம் !
அன்று, அபூ அம்மார் என அழைக்கப்பட்ட – நோபல் பரிசு பெற்ற – யாசர் அராஃபத் எனும் பெருந்தலைவர் வாழ்ந்த நாடு அது !
2004 ல் அந்தப் பெருமகன் தனது 75 ஆவது வயதில் மறைந்த பிறகு ஹமாஸ் இயக்கம் அங்கு நிலை கொண்டது. அதன் பின் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமான அதிகார ஆணவ நரபலிப் போராட்டங்கள்தான் கடந்த வருடங்களாக அங்கு நாம் காணும் மானுட வீச்சங்கள் அத்துனையும் !
கடந்த 2023 ஆண்டு ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டு 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது சரிதானா? என்பார் சிலர்.
அதற்காக, இஸ்ரேல் லட்சக்கணக்கான அமிலக் குண்டுகளை அப்பாவி மக்களின் மேல் வீசி அழிப்பது நியாயம்தானா என்பார் சிலர் !

“பிரியாவிடை” எனும் தலைப்பிட்டு தான் பிடித்து வைத்த 48 பிணைக்கைதிகளின் புகைப்படங்களை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டு பீதியை கிளப்பாமல் அவர்களை விடுவித்துவிட்டால் சமாதானத்துக்கு வழி பிறந்து – பாலஸ்தீனத்துக்கு உலகளவில் நியாயம் கிடைத்து விடுமே என்பார் சிலர் !
சரிதான். அதன் பின்னும் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தும் என்பதற்கு என்ன உத்தரவாதம் எனக் கேட்டு நிற்பார் சிலர் !
இப்படி சரிக்கு சரியான லாவணி கேள்விகளுக்கு முகம் கொடுப்பதில்லை இந்தக் கட்டுரைக்கான நோக்கம் ! ஐயகோ, ஆங்கே வீழ்ந்து கொண்டிருப்பது மானுடம்! அதனை விரைந்து நிறுத்த குரல் கொடுப்பது ஒரு எழுத்தாளனுக்கான கடமை ! அவ்வளவே !
ஆம், பாலஸ்தீனத்தின் அந்த காஸா நகர் இன்று பிணந்தின்னிக் கழுகள் சூழும் அவலக் காடாகிக் கொண்டிருக்கின்றது. ஆங்கிருந்து வரும் ஓலக்குரல்கள் கதிகலங்க வைக்கின்றது !
அன்றந்த ஈழத்தில் இருந்து ஈரக்குலை பிடுங்க எழந்த ஓலக் குரல்களுக்கு ஒப்பாக நமது நெஞ்சகத்தை கசக்கிப் பிசைந்து கொண்டிருக்கின்றது காஸா !
வான்வழித் தாக்குதல் போதாது என்று இன்று தரைவழித் தாக்குதல்களையும் முடுக்கி விட்டிருக்கிறது இஸ்ரேல். இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த அதிகாலை வேளையில் அங்கே 22 உயிர்கள் சிதறிக் போய்விட்டதாய் செய்தி வருகின்றது.
காஸாவின் சுகாதார அமைச்சகம் – மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் அடுத்த இரண்டு நாட்களில் பல மருத்துவமனைகள் இழுத்து மூடப்படும் என அச்சம் தெரிவித்திருக்கிறது.
ஓ… எனதருமை இஸ்ரேலியரே! மனம் வெதும்பி உங்களைக் கேட்கிறேன்…

முள்மகுடம் தாங்கி கொல்கதாப் பாதையில் அன்று உங்கள் ஏசுபிரான் தள்ளாடி நடந்து சிலுவையேறியது இதற்குத்தானா?
அவர் பிறந்த பூமிக்கு சொந்தம் கொண்டாடும் எனதருமை இஸ்ரேலியரே, அவர் மொழிந்த அன்புக்கு சொந்தம் கொண்டாட தவறி நிற்பது ஏன் ?
அடித்தது போதும் என எச்சரித்து அமர்த்தாமல் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கும் இந்தத் தன்முனைப்பு தாக்குதலின் முடிவில் நீங்கள் கண்டடையப் போவதுதான் என்ன ?
சுமந்து பெற்ற குழந்தையின் பிஞ்சு உடல் கண்டந்துண்டமாகச் சிதறிப் போகக் கண்டு வயிற்றில் அடித்துக் கொண்டுக் கதறும் தாய்மார்களின் பாரக் குரலுக்கு நியாயம் செய்யாததொரு நாட்டின் இறையாண்மை இருந்தென்ன அழிந்தென்ன ?
விழுந்து வெடித்த குண்டுகளால் சிதறிக் கிடக்கும் தன் தாயின் பாலூட்டிய முலைக்கு அருகே தலையில் அடித்துக் கொண்டுக் கதறும் ஒரு அப்பாவி மகனின் அலறலுக்கு விடைக்காத போது இந்த உலகம் உருண்டென்ன ஓய்ந்தென்ன?
கடும்சுரம் கண்டு, வயிற்றுப் போக்கால் கதறும் தன் குழந்தைக்கு மருந்திட வழியற்று ‘அல்லா, அல்லா’ என அண்ணாந்து கையேந்திப் பரிதவிக்கும் தாயின் கண்ணீருக்கு பதில் சொல்லாது போரிட்டுக் கொண்டிருக்கும் நாடு என்ன நாடு ?
பட்டினிக் கொடுமையால் மூச்சுவிடக் கூடத் தெம்பில்லாது தலை தொங்கிக் கிடக்கும் பிஞ்சுகளைக் கண்டும் மனமிறங்காத உலக ஆளுமைகளுக்கு – மறுமையில் இறைவனது சன்னிதானத்தில் கிடைக்கப் போவதுதான் என்ன ?
பாலஸ்தீனத்தை அங்கீகரித்து இந்தியா உட்பட பல மேற்குலக நாடுகள் அறிவித்துள்ளன. ஆனால், இன்றளவில் ஆங்கே 65,283 உயிர்கள் அழிந்தொழிந்து போய் விட்டனவே ! படுகாயமடைந்த 1, 66,575 மெலிந்த தேகங்கள் முதலுதவி கூட கிடைக்காமல் உயிருக்கு தத்தளிக்கின்றனவே !
வருங்கால உலகை வாழ்விக்க வல்ல பிஞ்சு உயிர்கள் மாய்ந்து போயினவே ! எஞ்சிய பிஞ்சுகளின் உள்ளங்களுக்குள் உலக மானுடம் குறித்த அவநம்பிக்கையும் பேரச்சமும் ஆழப் பாய்ச்சி விடப்பட்டனவே !

சட்டென நெக்குருகும் மனம் படைத்த நமது மாண்புமிகு முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள்,
“அப்பாவி உயிர்கள் நசுக்கப்படும் போது மௌனமாக இருப்பது ஒரு தேர்வாகாது. இந்தியா உறுதியாக பேச வேண்டும். உலகம் ஒன்றிணைய வேண்டும். இந்தக் கொடுமையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நாம் அனைவரும் செயல்பட வேண்டும்” எனத் தன்னளவில் வெகுண்டு குரல் கொடுத்தார்.
தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன், இயக்குனர் அமீர், நடிகர் சத்யராஜ், ப்ரகாஷ்ராஜ் உள்ளிட்ட பற்பலரும் தங்களது உள்ளக் குமுறல்களை மேடையிட்டு மானுடம் வாழப் பெருங்குரல் எழுப்பினார்கள்.
மானுடத்தை வலியுறுத்தும் இப்படியான குரல்கள் நாடெங்கும் வலுப்பெற வேண்டும்.
எஞ்சியிருக்கும் இஸ்ரேலியர்களை விடுவித்துவிட்டு மிஞ்சியிருக்கும் தன் மக்களைக் காக்க ஹமாஸ் முன்வரவேண்டும். இஸ்ரேல் தன்னிடமிருக்கும் மிதமிஞ்சிய வளத்தை மானுட அழிவுக்குப் பயன்படுத்தாமல் தளவாடப் பாசறைகளின் தாழ்ப்பாள்களை இறுகப் பூட்ட வேண்டும்.
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டால் மட்டும் போதாது. இஸ்ரேலுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து போரை நிறுத்த உலக நாடுகள் முன் வரட்டும்.
போரற்ற உலகத்தில் பேரன்பு நதி பாய சீனத்து மாவோ சொன்னதுபோல ஆயிரம் பூக்கள் மலரட்டும் ! மானுடம் வெல்லட்டும் !
முடிவாக, கடந்த ஆண்டு மின்னம்பலத்தில் – ரம்ஜானுக்காக நான் எழுதிய சில இலக்கிய வெண்பாக்களை வேதனையோடும் அடர்ந்த ஆதங்கத்தோடும் மீண்டும் பதிந்து வைக்கிறேன் !

அன்பழிய லாச்சே; மதியழியப் பாரெல்லாம்
வன்புணர லாச்சே; வழக்காச்சே – குண்டுகள்
எங்கும் பொழிய இருளாச்சே; ஐயோஎன்
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
இஸ்ரேல் ஒருபுறமாய் செல்ல; எதிர்கணைகள்
புஸ்ஸுபுஸ் சென்றே விரைந்தெழுதே – அல்ரஃபா
சொல்லறியா பச்சைக் குழந்தை பதருதையே
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
எல்லோரும் ஓர்வழியாய் உணரத் தலைப்பட்டு
அன்பே வழியென்று வாழணுமே – செல்லாத
பொல்லா மதமேறப் பலனுண்டோ சொல்லுமே
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
கட்டுரையாளர் குறிப்பு:

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.