அண்ணாமலை அத்தியாயம் ஓவர்? கை கழுவியது பாஜக?

Published On:

| By Pandeeswari Gurusamy

Annamalai

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை பாஜக முழுமையாக கை கழுவிவிட்டதாக தெரிகிறது. அண்ணாமலைக்கு பதவி கொடுக்காதது தொடங்கி பிரதமர் மோடியை வரவேற்கும் பட்டியல் இடம் இல்லாதது வரையிலான நிகழ்வுகள் இதனையே வெளிப்படுத்துகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக கேரளா செல்லும் வழியில் கோவைக்கு நேற்று வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மோடியை வரவேற்றனர்.

ADVERTISEMENT

ஆனால் தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, மோடியை வரவேற்க செல்லாதது பேசுபொருளானது. ”தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்காததால் அண்ணாமலை அதிருப்தி.. மோடியை வரவேற்காமல் புறக்கணித்த அண்ணாமலை” என்ற தலைப்புகளில் விவாதங்கள் களைகட்டின.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், “மோடியை வரவேற்கும் லிஸ்ட்டில் அண்ணாமலை பெயரும் இருந்தது.. நான் கூட விமான நிலையம் வந்த உடன் அண்ணாமலை எப்போது வருவார்? என கேட்டேன்.. அண்ணாமலைதான் மோடியை வரவேற்க வரவில்லை என தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

ஆனால் பிரதமர் மோடியை வரவேற்க தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இணைந்து டெல்லிக்கு அனுப்பி வைத்த பட்டியலில் அண்ணாமலையின் பெயரே இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

பிரதமர் மோடியை வரவேற்பதற்காக 19 பேர் கொண்ட பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அண்ணாமலையின் பெயர் இல்லை. அந்த பட்டியலில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன் உட்பட மொத்தம் 11 பாஜகவினர், எஸ்பி வேலுமணி உட்பட 8 கூட்டணி கட்சியினர் பெயர் மட்டுமே உள்ளது. இதனால் அண்ணாமலையின் பெயர் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது.

ADVERTISEMENT
அண்ணாமலையின் அரசியல்

கடந்த 2019ஆம் ஆண்டு காவல்துறைப் பணியைத் துறந்த அண்ணாமலை, ஆர்எஸ்எஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார். தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 38.71 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக 2021 ஜூலை 8ஆம் தேதி நியமிக்கப்பட்டார். மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் “அரசியலில் நண்பனும் இல்லை.. எதிரியும் இல்லை” என்பதற்கு ஏற்ப எதிர்க்கட்சியான திமுகவை விமர்சித்தது போல கூட்டணிக்கட்சியான அதிமுகவையும் அவ்வப்போது விமர்சிக்கத் தொடங்கினார்.

அண்ணாமலை vs அதிமுக

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வாதி என்று பேசியது முதல் அண்ணா குறித்த விமர்சனம் வரை அவருடைய பேச்சுகள் அதிமுகவை சீண்டும் வகையில் இருந்தன. ஒருகட்டத்தில் அதிமுக தரப்பிலும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. இதன்விளைவாக 2023 செப்டம்பரில் கூட்டணி முறிந்தது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை இரு கட்சிகளும் தனியாகவே சந்தித்தன. கோவை தொகுதியில் களமிறங்கிய அண்ணாமலை 32.8 சதவிகித வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

உச்சகட்டமாக, 2024 ஆகஸ்ட் மாதம் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “கூவத்தூரில் நடந்தது அலங்கோலம். கூவத்தூரில் ஒப்பந்தம் அமைப்பில் முதலமைச்சரைத் தேர்வு செய்தீர்கள். அதன்பிறகு தவழ்ந்து காலில் விழுந்து பதவியைப் பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையைப் பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு 4-வது இடம் கூட கிடையாது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அதிமுகவுடன் கை கோர்த்த பாஜக

இதற்கிடையில், தமிழகத்தில் கட்சியை வலுவாக்கத் துடிக்கும் பாஜக தலைமை, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டது. ஆனால் கூட்டணிக்கு எடப்பாடி போட்ட முதல் கண்டிஷன், அண்ணாமலை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதுதான் என தகவல்கள் வெளியாயின.

அண்ணாமலை பதவி பறிப்பு

அதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஜனவரி மாதம் அமித் ஷா முன்னிலையில் அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி மீண்டும் உறுதி செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதன் பின்னர் பாஜக தலைமைக்கு கட்டுப்பட்டவராக அண்ணாமலை செயல்பட்டார். அதே நேரத்தில் அண்ணாமலை மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து கோவை மாவட்டத்தை மையமாக வைத்து தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி, திருப்பூர், கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவன்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் ஆகிய 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என காத்திருந்த அண்ணாமலைக்கு இந்த தொகுதிப் பட்டியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசனுக்காக கோவை வடக்கு தொகுதி மட்டுமே பாஜகவுக்கு தரப்பட்டுள்ளது. அண்ணாமலை போட்டியிட விரும்பிய சிங்காநல்லூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கவில்லை.

இது தொடர்பாக அதிமுக மூத்த தலைவர்களிடம் நாம் பேசுகையில், “கோவை தொகுதிகளில் ஒன்றில் அண்ணாமலை போட்டியிடுவதற்கு விரும்புகிறார்.. அவருக்கு ஒரு தொகுதியை ஒதுக்கலாம் என எடப்பாடியிடம் எஸ்பி வேலுமணி சொல்லி இருந்தார்.. எடப்பாடியும் அப்போதைக்கு தலையை மட்டும் அசைத்து ஓகே சொன்னார்.. ஆனால் பட்டியலில் வானதி போட்டியிடக் கூடிய கோவை வடக்கு மட்டும்தான் இருக்கிறது” என்கின்றனர்.

மொடக்குறிச்சியில் போட்டியிட மும்முரம்

இருந்த போதும், எப்படியாவது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட மொடக்குறிச்சி தொகுதியில் சீட் வாங்க வேண்டும் என அண்ணாமலை படுதீவிரமாக முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்டிருப்பது அண்ணாமலையையும் அவரது ஆதரவாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அண்ணாமலைக்கு அரசியல் அத்தியாத்தை தொடங்கி வைத்த பாஜகவே முடித்து வைப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share