ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறும் என நேற்று (ஆகஸ்ட் 11) ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதில், தாள் I நவம்பர் 1-ஆம் தேதியும், தாள் II நவம்பர் 2-ஆம் தேதியும் நடைபெறும். ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 8 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தேர்வு தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 12) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாளில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.
உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது. ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும்.
ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா? பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதனால் டெட் தேர்வு தேதி மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.