தெலுங்கு, தமிழ் படங்களில் ஸ்டைலிஸ்ட் ஆகப் பணியாற்றியவர் நீர்ரஜா கோனா.
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், இரும்புத்திரை, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக இவர் பணியாற்றியிருக்கிறார்.
சமந்தாவின் பிரத்யேக ஸ்டைலிஸ்ட் ஆகவும் இருந்திருக்கிறார். இவர் சில தெலுங்குப் படங்களில் பாடல்களும் எழுதியிருக்கிறார்.
இவர் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் கவிதைகளைத் தாங்கி ’வேவ்ஸ் சாண்ட் அண்ட் மேஜிக்’ என்ற பெயரில் ஒரு புத்தகமும் வெளியாகியிருக்கிறது.
கொரோனா காலகட்டத்திற்குப் பெரிதாகப் படங்களில் பணியாற்றாமல் இருந்த நீர்ரஜா, தற்போது இயக்குனராகக் களமிறங்கியிருக்கிறார்.
‘தெலுசு கதா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.
’எக்ஸ்ட்ரீமிஸ்ட்’ குணாதிசயம் கொண்ட பாத்திரங்களை ஜாலி, கேலியாகக் கையாளக்கூடிய சித்து ஜோனலகடா இதில் நாயகனாக நடித்திருக்கிறார். ராஷி கன்னா, ‘கேஜிஎஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.
’இரண்டு நாயகிகள்’ என்றாலே, அவர்கள் இருவரையும் ஒரே பாடலில் நாயகனோடு ஆட வைக்கிற வழக்கம் தெலுங்கில் என்.டி.ஆர். காலத்திற்கு முன்னிருந்தே தொடர்கிறது.
அதிலிருந்து ஒருபடி மேலேறி, இரண்டு நாயகிகள் உடன் ஒரே நேரத்தில் காதலில் ஈடுபடுவதாக, ‘கல்யாணம் செய்துக்கலாமா’ என்று கேட்பதாகக் காட்டுகிறது ‘தெலுசு கதா’ படத்தின் டீசர்.
என்ன, எங்கேயோ கேள்விப்பட்ட ‘ஒன்லைன்’ ஆகத் தெரிகிறதா? விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ போலவே உள்ளது டீசர் உள்ளடக்கம்.
என்ன, அந்த படத்தில் இருவரோடும் நாயகன் ஒன்று சேர்வதாக ‘கிளைமேக்ஸ்’ இருக்காது. இந்த படத்தில், ஒரே நேரத்தில் இரண்டு நாயகிகள் கன்னத்திலும் சந்தனத்தைத் தடவி நாயகன் ‘நலங்கு’ வைப்பதாகக் காட்சி இருப்பதைக் காட்டுகிறது ‘டீசர்’. அதுதான் கிளைமேக்ஸா அல்லது அதன்பிறகும் கதை தொடர்கிறதா என்பது படம் வெளியாகும்போது தெரியவரும்.
வழக்கமாக, இது போன்ற ‘கண்டெண்ட்’டை கேள்விப்பட்டவுடன் மாதர் சங்கங்கள் தொண்டையைச் செருமிக்கொண்டு எதிர்க்கக் கிளம்புவது வழக்கம். இந்த படத்தின் இயக்குனர் நீர்ரஜா ஒரு பெண் என்பதால், அந்த எதிர்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு..!