’குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ வரிசையில் மிகச்சாதாரணமான மனிதர்களையும் குடும்ப அமைப்பின் வலிமையையும் வெளிக்காட்டுகிற இன்னொரு வெற்றிப்படமாக மாறியிருக்கிறது ‘மெட்ராஸ் மேட்னி’. கார்த்திகேயன் மணி இயக்கிய இந்தப்படத்தில் காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்ரியன், விஸ்வா, சாம்ஸ், ஜார்ஜ் மரியான், சுனில் சுஹாதா, மதுமிதா, விஜய் டிவி ராமர், கீதா கைலாசம் ஆகியோருடன் சத்யராஜும் நடித்திருந்தார். is shankar asst director acting in madras matinee
இதில் சிறு பாத்திரங்களில் நடித்தவர்களும் கூட ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தனர். அவர்களில் ஒருவர் ’கெய்ல் அங்கிள்’ எனும் பாத்திரத்தில் நடித்தவர்.
பார்க்கப் புதுமுகமாகத் தெரிந்தாலும், அவரது நடிப்பில், உடல்மொழியில் சினிமாவை கரைத்துக் குடித்த லாவகம் தெரிந்தது. ஆனால், டைட்டிலில் பெயரைப் பார்த்தபோது பரிச்சயமானதாகத் தெரியவில்லை.
அவரது பெயர் ’அனந்த் வர்ஷன்’. பின்னந்தலையில் புரளும் ‘பங்க்’ முடிக்கற்றை, தாடி ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால், நிச்சயம் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் தோன்றும். குறிப்பாக, 90’ஸ் கிட்ஸ்களுக்கு அந்த அனுபவம் கண்டிப்பாக ஏற்படும்.

ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் ’பரீட்சைக்கு நேரமாச்சு’ என்று பஸ் டிரைவர், கண்டக்டரோடு வாக்குவாதத்தில் ஈடுபடும் இளைஞரை நினைவிருக்கிறதா? அவர்தான் இந்த அனந்த் வர்ஷன்.
’முதல்வன்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். காந்தி கிருஷ்ணாவிடமும் இவர் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார். அனந்த நாராயணன் என்ற இவரது பெயர் திரையுலக வட்டாரத்தில் பிரபலம்.
குறிப்பிட்ட காட்சியில் இவரது நடிப்பு அன்றிருந்த ரசிகர்களைக் கவர்வதாக அமைந்தது.
பிறகு, ‘வால்மீகி’ என்ற படத்தை இயக்கினார். அகில், மீரா நந்தன், தேவிகா நடித்த அந்த படம் பெரிய கவனிப்பைப் பெறாமல் போனது.

ஷங்கரின் உதவி இயக்குனர் என்ற அடையாளம், சிறப்பானதொரு ‘ஹீரோயிச’ படத்தைத் தருவார் என்ற எதிர்பார்ப்பை இவர் மீது சுமத்தியிருந்தது. அதற்கு நேர்மாறான அனுபவத்தைத் தந்ததால் படம் தோல்வியடைந்தது.
இத்தனைக்கும் இளையராஜாவின் இசை, அழகப்பனின் ஒளிப்பதிவு என்று அதன் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு அபாரமானதாக இருந்தது. ‘அதீத டீட்டெய்லிங் இருந்தும் ஜனரஞ்சகமான கதை சொல்லல் இல்லை’ என்ற விமர்சனங்களுக்குள் மூழ்கியது.
பழைய திரைப்படங்களில் ‘அவர்தான் இவரா’ என்று ஆச்சர்யப்படுகிற காட்சிகளை நிறையவே காண முடியும்.
அப்படிப்பட்ட ‘க்ளிஷே’ அனுபவத்தைக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு காலம் கழித்து ’மெட்ராஸ் மேட்னி’யில் தந்திருக்கிறார் அனந்த் வர்ஷன். அவரது ‘கம்பேக்’ சிறப்பானது எனும்படியாக, அடுத்தடுத்து அவர் பல படைப்புகளில் இடம்பெற வேண்டும்..!